ஆட்சியில் ஆண் பாதி....! பெண் பாதி...!! ஓ.பி.எஸ். சர்ச்சை பேச்சு

 ஆட்சியில் ஆண் பாதி....!  பெண் பாதி...!!  ஓ.பி.எஸ். சர்ச்சை பேச்சு.....இன்றைய சமூகத்தில் பெண்கள் பெரும்பாலும் சமமாகவும், மரியாதையுடனும் நடத்தப்படுவதில்லை. பெண்களின் முன்னேற்றமே ஒட்டுமொத்த சமுதாயத்தின் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது. ஆட்சியிலும், அதிகாரத்திலும் பெண்கள் முக்கிய பங்கு வகித்தாலே பெண் சமூகத்தில் முன்னேற்றம் ஏற்படும் என்ற கருத்துகளும் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், தைரியத்தையும், நம்பிக்கையையும் ஆயுதமாக கொண்ட பல பெண்கள் இந்திய வரலாற்றில் வியக்க வைக்கும் பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளனர். அந்த வகையில், சிங்கப்பெண்ணாக திகழ்ந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அதிமுக எனும் மாபெரும் கட்சியை ஒற்றை பெண்ணாக வழிநடத்தி அக்கட்சியை ராணுவக் கட்டுப்பாட்டுடன் வைத்திருந்தார்.

இந்த நிலையில், ஜெயலலிதா காலத்தில் முதல்வராக மூன்று முறை அவராலேயே அமர வைக்கப்பட்டவரும், தற்போதைய துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அதில், பேசிய அவர், அரசாங்கத்தை ஆண் இரண்டரை ஆண்டுகளும், பெண் இரண்டரை ஆண்டுகளும் ஆட்சி செய்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார். அவரது இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் மத்தியிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.