பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் புறக்கணிப்போம் திமுக தொழிற்சங்கங்கள் முடிவு

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் புறக்கணிப்போம் திமுக தொழிற்சங்கங்கள் முடிவு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியப் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவர்கள் முன்வைக்கும் கோரிக்கை சம வேலைக்கு சம ஊதியம் என்பது தான். இதனை முறைப்படுத்த குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஆய்வு செய்து தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்தனர். ஆனால் அவற்றை செயல்படுத்தாமல் அரசு மெத்தனம் காட்டி வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஏனெனில் ஊதியத்தை உயர்த்த விதிக்கப்பட்ட காலக்கெடு கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இதேபோல் கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்களுக்கு அளிக்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான கால வரம்பும் அக்டோபர் 31ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. ஆனால் இதுவரை ஊதிய உயர்வு தொடர்பாக எந்தவொரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இதனால் ரேஷன் கடை மற்றும் கூட்டுறவு பண்டக சாலை ஊழியர்கள் எந்த நேரத்திலும் போர்க்கொடி உயர்த்தும் அபாயம் இருந்தது.

சமீபத்தில் தமிழக மக்களை மகிழ்வூட்டும் வகையில் அரிசி ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் 2,500 ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதற்காக 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுவும் வீடு, வீடாகச் சென்று டோக்கன் வழங்கப்பட்டு, ரேஷன் கடைகளில் ஊழியர்கள் மூலம் பொங்கல் பரிசு அளிக்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இதற்கான டோக்கன் டிசம்பர் 26ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை வழங்கப்படவுள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 4ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரொக்கப் பணம் பெற்றவுடன் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது தேர்தலை ஒட்டி சுயநல நோக்கில் எடுக்கப்பட்ட முடிவு என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. இந்நிலையில் வரும் ஜனவரி 4ஆம் தேதிக்குள் கூட்டுறவு, ரேஷன் கடை ஊழியர்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை தமிழக அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்காமல் புறக்கணிப்போம்

மேலும் அனைத்து தொழிற்சங்கங்கள் உடன் பேசி கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என்று ரேஷன் கடை ஊழியர்கள் சார்பில் பல்வேறு தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. இதில் தொமுச, ஐ.என்.டி.யு.சி, ஐ.எம்.எஸ், தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம், சிஐடியு உள்ளிட்ட சங்கங்களிடையே ஒருமித்த கருத்து நிலவுவது குறிப்பிடத்தக்கது.