இங்கிலாந்தில் இருந்து ஓசூர் திரும்பிய 6 பேருக்கு Corona..?
இங்கிலாந்தில் புதிதாக பரவி வரும் வீரியமிக்க புதிய வகை கொரோனா வைரஸ், உலக நாடுகளையே மீண்டும் பீதிக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில் லண்டனில் இருந்து டெல்லி, சென்னை வந்த விமானங்களில் பயணம் செய்த 6 பயணிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. கடந்த 2 நாட்களில் மட்டும் இங்கிலாந்து இருந்து இந்தியா திரும்பிய 20 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் இருந்து விமானம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு வந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
ஓசூர் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த 42 வயது ஆண், 40 வயதான அவரது மனைவி, 10 வயது மகன், 6 வயது மகள் என 4 பேர் நேற்றுமுன்தினம் லண்டனில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையம் வந்தனர். பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஓசூர் வந்தனர்.
இதையறிந்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளனர். லண்டனில் கொரோனா பரிசோதனை செய்யாமல் அவர்கள் திரும்பியதால் நேற்று அவர்களுக்கு கொரோனா பரிசோதனைக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன.
இதேபோல் ஓசூர் அடுத்த தொரப்பள்ளி அக்ரஹாரத்தை சேர்ந்த 30 வயது ஆண், இங்கிலாந்தில் இருந்து கடந்த 19-ந் தேதி திரும்பினார். அவர் ஏற்கனவே இங்கிலாந்தில் கொரோனா பரிசோதனை செய்திருந்ததால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
மேலும் இங்கிலாந்தில் இருந்து திரும்பிய காவேரிப்பட்டணத்தை சேர்ந்த 27 வயது ஆண், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறியதாவது:-
இங்கிலாந்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு திரும்பிய 6 பேருக்கும் கொரோனா அறிகுறி எதுவும் இல்லை. இருப்பினும் அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவர்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள்.
வெளிநாட்டில் இருந்து பயணி வந்தால் கொரோனா தொற்று பரிசோதனைக்கு பிறகே விமான நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவர். பிறகு நாடு திரும்பியதும் விமான நிலையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது. 3-வது கட்டமாக சொந்த ஊரில் பரிசோதனை செய்யப்பட்டு அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.