காங்கிரஸுக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள்......?

 காங்கிரஸுக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள்......?




திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தற்போது சந்தித்து பேசிவருகிறார். இந்த சந்திப்பின் மூலம் சட்டசபை தேர்தலுக்கு திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதிப்படுத்தப்படுகிறது. 

தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அண்மையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சரும் மூத்த பாஜக தலைவருமான அமித்ஷா பங்கேற்றார்.

இதில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி தொடரும் என அறிவித்தார். துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், அதிமுக- பாஜக கூட்டணி தொடரும் என்றார். இதனைத் தொடர்ந்து அமித்ஷாவுடன் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த ஆலோசனையில் பாஜகவுக்கு 60 தொகுதிகள் வேண்டும் என்றும் அது தொடர்பான பட்டியல் ஒன்றையும் அமித்ஷா கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் பாஜக கேட்கும் அத்தனை தொகுதிகளையும் அதிமுக தருமா? அல்லது 20 முதல் 30 தொகுதிகள் மட்டுமே ஒதுக்குமா? என்பது பேசுபொருளாக இருந்து வருகிறது.



இந்த நிலையில் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று மாலை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின் மூலம் திமுக- காங்கிரஸ் கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படுகிறது.

மேலும் இச்சந்திப்பின் போது காங்கிரஸ் கட்சி தங்களுக்கான தொகுதிகள் பற்றியும் ஸ்டாலினிடம் ஆலோசித்திருப்பதாகவும் தெரிகிறது. ஏற்கனவே திமுவிடம் தொகுதிகளை பேரம் கேட்டு பெறப்போவதில்லை என தினேஷ் குண்டுராவ் கூறியிருந்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு அதிகபட்சம் 25 தொகுதிகள் ஒதுக்க வாய்ப்புள்ளது என்கின்றன அறிவாலய வட்டாரங்கள்.