பாஸ்டேக் பொருத்த பிப்.,15 வரை காலக்கெடு
இன்று (டிச.,31) நள்ளிரவுடன் முடியவிருந்த பாஸ்டேக் பொருத்துவதற்கான காலக்கெடு, பிப்.,15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் நாளை (ஜன.,01) முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தும் நடைமுறையை எளிதாக்குவதற்காக வாகனங்களில் 'பாஸ்டேக்' அட்டையை வாகனங்களின் கண்ணாடியில் ஒட்டப்படும்.

அதில் அவ்வபோது தொகையை வரவு வைத்துக் கொள்ளலாம். சுங்கச் சாவடிகளை அந்த வாகனங்கள் கடக்கும்போது, அங்கு பொருத்தப்பட்டுள்ள கருவி, 'பாஸ்டேக்' வாயிலாக கட்டணத்தைக் கழித்துக் கொள்ளும். இந்த வசதியின் மூலமாக சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக, வாகனங்கள் காத்திருக்க வேண்டிய நேரம் வெகுவாகக் குறையும். இந்த நடைமுறை ஏற்கனவே அமலுக்கு வந்தவிட்டாலும், சுங்கச் சாவடிகளில் நேரடியாகக் கட்டணம் செலுத்தி பயணிப்பதற்கும் தற்போது அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இன்று (டிச.,31) நள்ளிரவு முதல் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில், அதற்கான காலக்கெடு பிப்ரவரி 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.