அமெரிக்காவில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை

அமெரிக்காவில் மீண்டும் வாக்கு எண்ணிக்கைஅமெரிக்காவில் நவம்பர் 3ஆம் தேதியன்று அதிபர் தேர்தல் முடிவடைந்தது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளரும், முன்னாள் துணை அதிபருமான ஜோ பைடன் 290 வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளார். அவருக்கு அமெரிக்காவிலும், உலக அரங்கிலும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.


துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார். ஜனவரி 20ஆம் தேதியன்று பதவியேற்பு விழா நடைபெறவுள்ள நிலையில், அடுத்த ஆட்சிக்கான திட்டப் பணிகளை ஜோ பைடன் ஏற்கெனவே தொடங்கிவிட்டார். முக்கியமாக கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்துள்ளார்.

எனினும், ஜார்ஜியா மாகாணத்தில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என அறிவிக்கபப்ட்டிருந்தது. ஜார்ஜியாவில் வழக்கமாக வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலையில் இருந்தார். மேலும், ஜார்ஜியா வழக்கமாக வலதுசாரிகள் கைவசம் இருக்கும் மாகாணம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், திடீரென ஜோ பைடன் முன்னிலையை பிடித்து வழக்கத்துக்கு மாறாக ஜனநாயக கட்சி ஜார்ஜியாவை கைப்பற்றியது. இதில், 14,000க்கும் மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் ஜோ பைடன் முன்னிலையில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து ஜார்ஜியாவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜார்ஜியாவில் ஒவ்வொரு மாவட்டத்தில் அனைத்து வாக்குகளும் மீண்டும் கையாலேயே எண்ணப்படும் என ஜார்ஜியா மாகாண அரசின் செயலாளர் பிராட் ரேபன்ஸ்பெர்கர் தெரிவித்துள்ளார்.தேசிய அளவிலான தேர்தலின் முக்கியத்துவத்தை உணர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மறு வாக்கு எண்ணிக்கை கடினமாக இருந்தாலும், அனைவரிடமும் நம்பிக்கையை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்துள்ளார்.