ராணுவ தாக்குதலில் தப்பித்த சிறுவன், மனதை உருக்கும் புகைப்படம்!

 ராணுவ தாக்குதலில் தப்பித்த சிறுவன், மனதை உருக்கும் புகைப்படம்!




ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டத்தின் சோபோரே என்ற இடத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் ரோந்து சென்ற வாகனத்தை குறித்து வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, தீவிரவாதிகளுக்கும், சி.ஆர்.பி.எப். வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற சண்டையில், சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் மற்றும் பொது மக்களில் ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்தனர்.
 

இந்த தாக்குதலில் நூலிழையில் தப்பித்த சிறுவன், தீவிரவாதிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையான தனது தாத்தாவின் மேல் அமர்ந்து அவரை எழுப்பும் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. அச்சிறுவனை அந்த இடத்தில் இருந்து பாதுகாப்பு படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். அப்போது, அந்த சிறுவன் மிகவும் பயத்துடன் இருந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

“சோபோரே என்ற இடத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் இருந்து ஜம்மு-காஷ்மீர் போலீசார் 3 வயது சிறுவனை துப்பாக்கி குண்டுகள் தாக்காமல் பத்திரமாக மீட்டுள்ளனர்” என்று காஷ்மீர் மண்டல போலீசார் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

ஸ்ரீநகரின் இருந்து தனது தாத்தாவுடன் ஹண்ட்வாரா நோக்கி காரில் சென்ற போது, பாரமுல்லா மாவட்டம் சோபோரே எனும் இடத்தில் சி.ஆர்.பி.எப். மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவர்கள் சென்ற காரும் சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.