கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல்: நள்ளிரவில் நடவடிக்கை!

கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்கு சீல்: நள்ளிரவில் நடவடிக்கை!




கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலை நடத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என போராட்டங்கள் நடைபெற்றன. இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகள் கறுப்பர் கூட்டத்துக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுத்தன.

 

மேலும் சென்னை வேப்பேரியில் உள்ள மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனலுக்கு எதிராக புகார் அளித்தனர். இதனால் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அந்த யூ டியூப் சேனலைச் சேர்ந்தவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் கறுப்பர் கூட்டத்தைச் சேர்ந்த சுரேந்திரன் தாமாக முன்வந்து புதுச்சேரியில் சரண் அடைந்தார். அவரை கைது செய்த போலீஸார் சென்னை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான விவாதங்கள் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல் அலுவலகத்துக்கு மத்திய குற்றப் பிரிவு போலீஸார் சீல் வைத்துள்ளனர்.

நேற்று நள்ளிரவில் தி நகர், கண்ணம்மாபேட்டை அருகே அமைந்துள்ள கறுப்பர் கூட்டம் அலுவலகத்துக்குச் சென்ற மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அங்கு சோதனையிட்டு ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் அலுவலகத்துக்கு சீல் வைத்துள்ளனர். அலுவலகத்தை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்ட நபரிடமும் குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.