கொரோனா பாதித்த அன்பழகன் மரணம் உணா்த்துவது என்ன?
கண்ணம்மா பேட்டையில் அடக்கம் செய்ததுடன் ஜெ.அன்பழகன் மரணம் முடிந்துவிடவில்லை.. ஏராளமான பாடத்தையும், படிப்பினையையும் அந்த மரணம் நமக்கு சொல்லி தந்துவிட்டு போயுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தொற்று வந்து இந்தியாவில் இறந்து கொண்டிருக்கிறார்கள்.. இன்னமும் பலர் பாதிப்பில் உள்ளனர்.
எப்படி இதற்கு சிகிச்சை தருவதென்றே தெரியாமல் உலக நாடுகளே கதி கலங்கி உள்ளன.. இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில், அதுவும் சென்னையில் தொற்று அதிகம் என்பது ஒருசில மாதமாகவே உள்ள இயல்பு ஆகும்.
இவைகள் தெரிந்தும், தன்னை எந்தவிதத்திலும் அன்பழகன் கவனித்து கொள்ளவில்லையே என்பதுதான் கவலையாக உள்ளது.. எத்தனையோ முறை திமுக தலைவர் உடல்நலனை கவனித்து கொள்ளுங்கள் என்று மா.செ. முதல் நிர்வாகிகள் வரை அனைவரையும் வீடியோ மூலம் கேட்டு கொண்டபடியே இருந்தும், அஜாக்கிரதையாக விட்டுவிட்டார். கொரோனா பணியில் காட்டிய தீவிரத்தில் கொஞ்சம் தன் உடல்நலனில் காட்டிக் கொள்ளவில்லையே என்று ஆதங்கம்தான் அதிகரிக்கிறது.. நேற்று தங்கள் மன்றத்து நிர்வாகிகளுக்கு ரஜினி ஒரு அட்வைஸ் தந்திருந்தார்.
அதில், "அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல... பிசாசுத்தனமான அசுர அடி.. இப்போதைக்கு இது தீராது போல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்...
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை.. ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு" என்று கூறியிருந்தார்.. ரஜினி சொன்னது 100 சதவீதம் உண்மை.
அசுர அடி, பிசாசுத்தனமான அடிதான், நம் கண்ணெதிரே அன்பழகன் மரணத்தில் நடந்துள்ளது.. திமுக என்றில்லை, அதிமுக, உட்பட யாராக இருந்தாலும் சுய பாதுகாப்பு அவசியமாகிறது.. ஜனவரியில் நினைத்ததைவிட அடுத்த 3 மாதங்களில் அதன் கொடூரம் அதிகமாக இருந்தது.. இன்றோ பன்மடங்கு வீரியமாகி உயிரையே கலங்க வைத்து வருகிறது.
இதுபோன்ற கொள்ளை நோய் பரவல் சமயங்களில், மக்களை காக்க வேண்டிய அவசியம்தான்.. மக்கள் நலப் பணிகளும் தவிர்க்க முடியாததுதான்.. மக்களை காப்பதுபோல, மக்களுக்கு உதவுவோரும் மிக மிக கவனமாக இருந்து தங்களை காத்து கொள்ளவேண்டி இருக்கிறது. குறிப்பாக பல்வேறு உடல் உபாதைகள் உள்ள தலைவர்கள், வயது முதிர்ந்தவர்கள், கட்சி பிரமுகர்கள் நேரடியாக களத்திற்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.