தோனி பட நாயகன் தற்கொலை: தற்கொலை எண்ணம் வருவது ஏன்? தவிர்ப்பது எப்படி?
(திரைப்பட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ஞாயிறன்று தற்கொலை கொண்டபின்பு, தற்கொலை குறித்த விவாதம் மீண்டும் எழுந்துள்ளது. சென்று ஆண்டு உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினத்தன்று பிபிசி தமிழில் வெளியான சிறப்புக் கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது.)
உலக அளவில் ஆண்டுதோறும் செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை முயற்சி தடுப்பு தினமாக (World Suicide Prevention Day) அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் உலக அளவில் லட்சம் பேர் தங்கள் உயிரை தாங்களே மாய்த்து கொள்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, 2016ஆம் ஆண்டு 15 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் இறப்பதற்கு இரண்டாவது மிகப் பெரிய காரணம் தற்கொலை ஆகும்.
தற்கொலை தொடர்பான காரணங்கள் மற்றும் தீர்வு குறித்து மருத்துவர் மற்றும் உளவியல் நிபுணர் சரண்யாவை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டது.
"இந்த உலகத்தில் பிறக்கும்போது நம்முடைய மூளையில் எந்த ஒரு தகவலும் இருக்காது. நம் மூளையில் இருக்கும் தகவல்கள் இங்கிருந்து பெறப்பட்டவையே. நம் மூளை தகவலை சேகரிக்கும் என்றால் அதனால் தகவலை அளிக்கவும் முடியும். இந்த முறையையே நான் கையாளுகிறேன்" என்கிறார் மனநல நிபுணர் மருத்தவர் சரண்யா.
பெரும்பாலும் பெண்களுக்கு திருமண வாழ்வு மற்றும் அதில் ஏற்படும் பிரச்சனைகள்தான் தற்கொலைக்கு காரணமாக அமைகிறது. அவர்களை தடுப்பதும் அதுதான். தங்கள் பெற்றோரின் கண்ணீரை பார்க்கும்போது அவர்கள் மனம் மாறுகிறார்கள் எனக் கூறிய அவர் தான் சந்தித்த ஒருவரை பற்றி பகிர்ந்து கொண்டார்.
"தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவர் தன் வாழ்க்கையை முடித்து கொள்ளும் முடிவில் இருந்தார். தன்னைத்தானே வெறுத்து பல ஆண்டுகளாக அவர் தன்னை வருத்தி கொண்டிருந்திருக்கிறார். பல மருத்துவர்களை அதற்கு முன் அவர் பார்த்துவிட்டார். ஆனால் அவரிடம் எந்த மாற்றமும் இல்லை"
"உண்மையில் அவர் தன் வாழ்வை முடித்து கொள்ளும் எண்ணம் கொண்டிருக்கவில்லை என எனக்கு தோன்றியது. தன்னை பார்த்து உடன் இருப்பவர்கள் பரிதாபப்படுவதை அவர் விரும்பினார். நான் அதை உடைக்க விரும்பினேன். அதனால் அவரிடம் இப்படி யோசிக்காதே என நான் கூறவில்லை. அதற்கு மாறாக ப்ரொவொகிங் சைக்காலஜி என்னும் முறையை கையாண்டேன். அவருக்கு சில மாத்திரையை கொடுத்து அது தூக்க மாத்திரை என கூறினேன்."
"உண்மையில் அது சர்க்கரை பொடி நிரப்பப்பட்டு மாத்திரை போல இருக்கும். அதை சாப்பிட்டால் சிறிது மயக்கம் வருவது போல இருக்கும் அவ்வளவு தான் என்பதை அந்த பெண்ணின் குடும்பத்தாரிடம் விளக்கிவிட்டேன். அவர் அதை வாங்கி முழுவதுமாக சாப்பிட்டுவிட்டார். அவர் சாக தயாராகிவிட்டார்."
"அவர் முன் நான் வேறு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை என்பதுதான் அந்த மாத்திரையை அவர் அதை உட்கொண்டதன் காரணம். ஆனால், அதை யாரும் தடுக்கவில்லை என்றதும் அவர் பயந்துவிட்டார்"
"அதன்பின் அவர் தன்னுடைய பெற்றோர்கள் கலங்குவதை பார்த்ததும், தான் சாக விரும்பவில்லை தன்னை காப்பாற்றுங்கள் என மன்றாடினார். பின் அவரிடம் அது தற்கொலைக்கான மாத்திரைகள் அல்ல என்று விளக்கினேன். உன்னுடைய மூளை இதை தற்கொலைக்கான மாத்திரை என நம்பியது, இவ்வாறுதான் உன்னுடைய மூளை உன்னை அந்த நபரை பற்றி யோசிக்க வைக்கிறது. இது உன் மூளையின் கற்பனைக்கும் உண்மைக்கும் இடையே நடக்கும் போராட்டம் என்று கூறினேன். இந்த சிகிச்சை முறை தகுந்த நிபுணர்களின் உதவியோடும் மற்றும் அவர்களின் பெற்றோரின் சம்மதமும் வாங்கிய பிறகே நடந்தது" என்றார் மருத்துவர் சரண்யா.
அவருடைய மூளை அவரை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவர் புரிந்து கொண்டதும் அவர் இதிலிருந்து வெளிவந்துவிட்டார் என்கிறார் மருத்துவர்
மன அழுத்தம், குற்றவுணர்வு, உடல்நலக்குறைவு, நிதிச் சிக்கல்கள் உள்ளிட்ட பல காரணங்கள் ஒருவரை தற்கொலைக்குத் தூண்டுவதாக கருதப்படுகின்றன.
குறிப்பாக 15-29 வயது உள்ளவர்கள் தற்கொலை முடிவு எடுப்பதற்கான காரணம் பற்றி பிபிசி தமிழ் மனநல மருத்துவர் அசோகனிடம் பேசியது.
"முன்பிருந்த வாழ்க்கைமுறை இப்போது முற்றிலுமாக மாறிவிட்டது. கூட்டுக் குடும்பம் உடைந்து சிறு குடும்பங்களாக மாறியது. மனிதர்களுடனான பழக்கம் இல்லாமல் மின்னணு சாதனங்களை பெரிதும் நம்பத் தொடங்கிவிட்டோம். எல்லாவற்றிற்கும் செயலிகள், மின்னணு சாதனங்கள் என்று சார்பு இல்லாமல் கர்வத்தின் அடிப்படையில் மக்களிடம் விலகி, இன்னும் சொல்லப்போனால் நம்மிடமிருந்து நாமே விலகி இருக்கிறோம்"
"இதனால் வெற்றி என்ற ஒன்று மட்டுமே இலக்காக இருக்கிறது. தோல்வியைப் பற்றி நாம் எண்ணி பார்க்காமல் இருக்கிறோம். பலரிடம் பேசும்போது எதிர்மறை சம்பவங்களைப் பற்றிய அனுபவம் கிடைக்கும். இழப்பு என்பதன் அர்த்தம் புரியும். ஆனால் இப்போது மனிதர்களுடனான தொடர்பு குறைந்தது இழப்பு என்ற ஒன்று பற்றின புரிதல் இல்லாமல் போனது. எனவே அது ஏற்படும்போது அதை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை" என்று கூறினார் அசோகன்.
இதிலிருந்து விடுபட 4 விஷயங்கள் தேவை. அதில் சுயக்கட்டுபாடு மிக முக்கியமான ஒன்று. இரண்டாவது மற்றவர்களோடு எந்த இடற்பாடுகளும் இல்லாமல் பழகுவது. மூன்றாவது வாழ்க்கையின் மீதான நம்பிக்கை. நான்காவது சுய மதிப்பீடு. இவையே ஒரு மனிதனுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகும். இதை தவிர்த்து அடுத்தவருக்காக வாழத் தொடங்கினால் நாம் நிம்மதியை இழப்போம். இதை ஒருவர் புரிந்து கொண்டாலே இந்த எதிர்மறை எண்ணங்களை கையாளலாம் என அவர் கூறுகிறார்.
"மனநல மருத்துவர்கள் இதில் அறிவுரை கூற மாட்டோம், பிரச்சனைகளுக்கு தீர்வுகள் சொல்ல மாட்டோம். அவர்களின் பிரச்சனையை காது கொடுத்து கேட்போம். அதன்பிறகு இந்த பிரச்சனையை கையாள பல தேர்வுகளை அவர்கள் முன் வைப்போம். இதுவே அவர்கள் பிரச்சனையிலிருந்து விடுபட போதுமானதாக அமையும்" எனக் கூறியுள்ளார் மனநல மருத்துவர் அசோகன்.