தனியார் பள்ளிகளுக்கு மத்திய அரசு வழங்கிய RTE கல்வி கட்டணத்தை உடனே வழங்கு..! தமிழக அரசுக்கு பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவு மாநில தலைவர் K. R.நந்தகுமார் வேண்டுகோள்...!!
இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் படிக்கும் 25% ஏழை மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக மத்திய அரசு இதற்கான கட்டணத்தை வழங்கவில்லை என்று கூறி தமிழக அரசு இதற்கான மாணவர் சேர்க்கையை நான்கு மாத காலமாக நிறுத்தி வைத்திருந்தது.
தற்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு மத்திய அரசு இதற்கான இரண்டு ஆண்டுகளுக்கான கட்டணத்தை கடந்த வாரம் விடுவித்தது. இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை தொடங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் கல்வியாளர் பிரிவின் மாநில தலைவர் கே. ஆர். நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
கடந்த வாரம் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி தனியார் பள்ளிகளில் படிக்கின்ற 25% ஏழை மாணவர்களுக்கான இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டணத்தை தற்போது விடுவிக்கப் பட்டுள்ளதால் இந்த 2025-26 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை துவங்குகிறோம்.
தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி கட்டண பாக்கி தொகையை உடனே அந்தந்த பள்ளிகளின் கணக்கிற்கு அனுப்புகிறோம். எனவே இந்த ஆண்டுக்கான கல்வி கட்டணம் பெறப்பட்டிருந்தால் ஒரு வாரத்திற்குள்ளாக அந்த மாணவர்களுக்கு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது.
இதன் அடிப்படையில் தனியார் பள்ளிகளும் அரசின் உத்தரவை ஏற்று இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை துவக்கி உள்ளது. இப்போது வரை அரசின் அறிவிப்பு அறிவிப்பாக மட்டும் இருக்கிறதே தவிர தனியார் பள்ளிகளுக்கு பணம் வந்த பாடு இல்லை. இதனால் பள்ளி நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்கள்.
இதுவரை மத்திய அரசு பணம் தரவில்லை அதனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்று கூறிவந்த தமிழக அரசு. தற்போது மத்திய அரசு இரண்டு ஆண்டுகளுக்கான பணத்தை விடுவித்த போதும் அதை உரிய முறையில் தனியார் பள்ளிகளுக்கு வழங்காமல் இருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
இது ஏழை மாணவர்களின் கல்வியை பறிக்கும் செயலாகும். இலவச கட்டாய கல்வி சட்டத்திற்கு எதிராக, தனியார் பள்ளிகளின் தூய்மையான கல்வி சேவைக்கு எதிராக மாற்றான் தாய் மனப்போக்குடன் செயல்படும் நிலையை கைவிட்டு தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய இரண்டு ஆண்டுகளுக்கான கல்வி கட்டண பாக்கியை உடனடியாக விடுவித்து ஏழை மாணவர்கள் கல்வி உரிமை பாதுகாக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.