உயிரின் விலை மரணம்

 உயிரின் விலை மரணம்


அரிதாரம் பூசியவர்களை ஆண்டவனாகப் பார்க்கும் அவலமான அறியாமை அநியாயமாய் கரூரில் 42 உயிர்களைப் பறித்த சம்பவம் தாங்க முடியாத அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடையட்டும். அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

நெரிசலில் இடிபட்டு இறப்பது என்பது திட்டமிடத் தெரியாதவர்களின் திட்டமிடப்பட்ட கொலை முயற்சியாகும்.

நேரடி ஒளிபரப்பு இருக்கும் இன்றைய காலத்திலும் கூட  நேரில் சென்று பார்க்கத் துடித்த மக்களின் சினிமா வெறியும் ,அரசியல் அனுபவமில்லாத விஜய் கட்சியினரின் ஆர்வக் கோளாறும் ,, கூட்டம் சேர்ப்பதற்காக கடும் வெயிலில் மக்களைக் காக்க வைத்து   காலதாமதமாய் வந்த நடிகர் விஜய்யின் மனிதாபிமானமில்லாத அநியாய அலட்சியமும்  குறுகிய இடத்தில் கூட்டம் நடத்த அனுமதி தந்து .. நெரிசலுக்கு வாய்ப்பு தந்த அரசின் மெத்தனமும், அதிகாரிகளின் பொறுப்பற்ற நிர்வாகமும்  சேர்ந்து கரூரை களங்கம் சுமந்த கண்ணீர் பூமியாக்கியிருக்கிறது.

எழவு வீட்டில் பிடுங்கிய வரை லாபம் என்பது போன்று , துக்கத்தையும் அரசியலாக்கும் கேவலம் மீண்டும் அரங்கேறியிருக்கிறது.

ஒவ்வொரு கட்சியும் நிவாரணம் என்ற பெயரில் ஐபில் ஏலத்தில் வீரர்களுக்கு விலை நிர்ணயிப்பது போல் இறந்த உயிருக்கு விலை நிர்ணயித்து அபலைகளின் கண்ணீரை வாக்குகளாக்க முயற்சிக்கின்றன.

உழைப்புக்குக் கிடைக்காத ஊதியமும் மரியாதையும் உயிரை விட்டால்தான் கிடைக்கும் என்கிற கொடிய கொள்கையுள்ள ஒரே தேசம் நம் தேசம் என்பது உலக மகா அவமானமல்லவா ?

மக்களின் மடமையும்

கட்சிகளின் பொறுப்பின்மையும்

அரசின் அலட்சியமும்

அரசியல் வன்மமும்

கூட்டணி அமைத்து

உயிர் பலி கேட்பது

உலக மகா கோரம்

உள்ளம் உருகும் சோகமல்லவா ?

அறியா ஜனங்களை பலி கொடுத்து அரியாசனம் காண்பதற்கு பெயர் தான்ஜனநாயகமா ?

இத்தனை உயிர்களை பலி கொடுத்துத்தான் கட்சிக் கூட்டங்கள் நடத்துவது குறித்து அரசு அவசரம் அவசரமாய்  புதியவழிமுறைகளை வகுக்க வேண்டுமா ? பேரணிகள் , ரோடு ஷோக்களை கடுமையுடன் கண்டிப்பதற்கு  இப்போதுதான்  நீதிமன்றத்திற்குத் தெரிந்திருக்கிறதா ?

இவ்வாறெல்லாம்  உரத்து சிந்திப்போர் கோபம் பொங்கக் கேட்பதில் தவறென்ன ?

கடவுளோ,  கட்சியோ, மதமோ, மனிதனோ எதன் பின்னும் எவர் பின்னும் இனி  மனிதர்கள் மந்தையாய் செல்லும்  மடமைமையைக் கொளுத்துவோம்!

' ரோடு ஷோ' என்ற பெயரில் அரசியல் தலைவர்கள் , மதத் தலைவர்கள் , திரை நட்சத்திரங்கள் நடத்தும் பேரணிகளைத் 

தேசமெங்கும் நிரந்தரமாகத் தடை செய்வோம் !

மது , பிரியாணி , பணம் கொடுத்து  கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கும் அரசியல் வியாபாரிகளை அடியோடு ஓட ஓட  விரட்டியடிப்போம்!

உயிரின் விலை மரணமில்லை என்பதை வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு சென்று ஒவ்வொருவரிடமும் உரத்துச் சொல்வோம் .

உதயம் ராம்