ஜூலை 7ம் தேதி பள்ளி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையா?

தமிழகம் முழுவதும் இஸ்லாமிய சமுதாயத்தினரால் கொண்டாடப்படும் "முகரம் பண்டிகையை" முன்னிட்டு, ஜூலை 7, 2025 (திங்கட்கிழமை) அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளது.
சமீப நாட்களில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில் “முகரம்மை முன்னிட்டு ஜூலை 7 அன்று அரசு விடுமுறை அறிவிக்கப்படும்” என கூறி பலர் தகவல்களை பரப்பியுள்ளனர். இதனால் பொதுமக்கள், பள்ளிகள், அலுவலகங்கள் உள்ளிட்டவை குழப்பத்தில் சிக்கி வருகின்றன.
இதுகுறித்து தமிழக அரசு தகவல் சரிபார்ப்பு பிரிவு (Fact Check Tamil Nadu) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், “ஜூலை 7, 2025 அன்று அரசு விடுமுறை இல்லை. இந்த தகவல் தவறானது.
முகரம் பண்டிகை ஜூலை 6 – ஞாயிற்றுக்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது. இது வார விடுமுறையுடன் ஒத்துப்போனதால், அரசு விடுமுறை நாட்களில் மாறுதல் ஏதும் செய்யப்படவில்லை,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு தலைமை காஜி அலுவலகம் வெளியிட்ட செய்தியின்படி, 26-06-2025 அன்று காயல்பட்டினத்தில் முகரம் மாத பிறை காணப்பட்டது. அதன்படி, 27-06-2025 முதல் முகரம் மாதம் துவங்கியுள்ளது. இதனின்பேரில், யொமே ஷஹாதத் (முகரம் பண்டிகை நாள்) ஜூலை 6, ஞாயிறு அன்று கொண்டாடப்பட உள்ளது.
தற்போது சமூக வலைதளங்களில் பரவும் "அடுத்த நாள் (ஜூலை 7) அரசு விடுமுறை" என்ற தகவல் முழுமையாக வதந்தியாகும். இது தவறான விளக்கம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடியது என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுரை:
அரசு விடுமுறை தொடர்பான அறிவிப்புகளை அதிகாரப்பூர்வ வலைதளங்கள் மற்றும் அரசு அறிவிப்பு மூலம் மட்டுமே நம்பிக்கையுடன் பெறவும். வதந்திகளை பரப்பும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஜூலை 7, 2025 அன்று அரசு விடுமுறை கிடையாது.
முகரம் பண்டிகை ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமை வருவதால், அதற்கு மேலாக கூடுதல் விடுமுறை வழங்கப்படவில்லை. தகவல்களை பகிர்வதற்கு முன் சரிபார்த்து செயற்பட வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு நபருக்கும் உள்ளது.