ஆதார் திருத்தம் செய்ய இ-சேவை மையம் சென்றால் பள்ளி மாணவர்கள் அலைக்கழிப்பு
ரேஷன் கார்டு, பள்ளிக்கூடம், கல்லுாரிகளில் சேர்க்கை, பத்திரப்பதிவு, சலுகைகளுக்கான அரசுத்துறை சான்றிதழ், பாஸ்போர்ட் போன்றவற்றிற்கு விண்ணப்ப சூழலில் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இதன் திருத்த பணிகளை மேற்கொள்ள மாவட்டத்திலுள்ள ஆட்சியாளர் அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகங்கள், மத்திய அரசின் தபால் துறை அலுவலகங்கள், தேசிய, கூட்டுறவு வங்கிகள், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்கள் என அரசுத் துறை சார்ந்த மையங்களில் இதற்கான சேவைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இவை பெரும்பாலான இடங்களில் செயல்பாடின்றி மூடப்பட்டு உள்ளன. செயல்பாட்டில் உள்ள ஒரு சில இடங்களிலும் நாள் ஒன்றுக்கு 20 நபர்களுக்கு மேல் ஆதார் திருத்தங்கள் மேற்கொள்வதில்லை என கூறி மைய தற்காலிக பணிகளை புறக்கணிக்கின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களின் தகவல்கள் குறித்த பதிவேற்றம் செய்வதற்காக பெயர், பிறந்த தேதி, அலைபேசி எண், பெற்றோர் பெயரில் திருத்தம், முகவரி தொடர்பான மாற்றங்களுக்காக ஆதார் மையங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. சில வாரங்களாக மாணவர்கள் அரசு துறை ஆதார் மையங்களை நோக்கி படையெடுக்கும் சூழல் அதிகரித்துள்ளது.
ஆதார் மையங்களில் பெரும்பாலானவை செயல்பாடு இன்றி உள்ளதாக திருப்பி அனுப்பப்படுகின்றனர்.
சில தபால் அலுவலகங்களில் 2 வாரங்களுக்கு குறையாத அவகாச தேதியில் வந்து திருத்தம் செய்து கொள்ளும்படி பணியை புறக்கணித்து அனுப்புகின்றனர். சம்பந்தப்பட்ட இடங்களில் கண்காணிப்பு அலுவலர்களின் அலட்சியம் காரணமாக பள்ளி சேர்க்கை பணியில் தாமதத்தை பல மாணவர்கள் எதிர்கொள்ளும் அவலநிலை நீடிக்கிறது.