தமிழகத்தில் விரைவில் RTE மாணவர் சேர்க்கை: அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு.....!
இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் படி மாணவர் சேர்க்கை இன்னும் தொடங்கப்படாமல் உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதில் அளித்து பேசுகையில், "இலவச கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ-மாணவிகள் அரசு நிதியுதவி மூலம் படிக்க வைக்கப்படுகிறார்கள்.
அதற்கான நிதியாக ரூ.617 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதுபற்றி தலைமை செயலாளர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் வரவில்லை.
இதனையடுத்து நமது மாநில பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலாளரும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனரும் டெல்லி சென்று இருக்கிறார்கள். அவர்கள் திரும்பி வந்ததும், இந்த ஆண்டுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்கீழ் செயல்படுத்தும் திட்டம் குறித்த அறிவிப்பை தெரிவிப்போம்" இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களிடம் பேசும் போது கூறினார்.
23-24 ஆம் ஆண்டுக்கான RTE கல்வி கட்டணம் பாக்கி தொகையும் பள்ளிகளுக்கு விரைவில் விடுவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.