இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை (RTE) புறக்கணிக்கும் தமிழகம்...?! கொதிக்கும் பெற்றோர்கள்......

இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தை (RTE) புறக்கணிக்கும் தமிழகம்...?!  கொதிக்கும் பெற்றோர்கள்......

இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் அரசின் உதவியுடன் தனியார் பள்ளிகளில் தரமான இலவச கல்வி பெற, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆர்.டி.இ., எனப்படும் ஏழை குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளிலும், ஏழை குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி.,  வகுப்பில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.

அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இந்த நடைமுறை, 2013 - 14ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இதன்படி, மாணவர் சேர்க்கை ஏப்., 2ல் துவங்கி மே 29க்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்கமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், மாணவர் சேர்க்கை அறிவிப்பு, rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தமிழக அரசால் வெளியிடப்படும்.

இந்த ஆண்டு மே மாதம் துவங்கியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இணையதளத்தில் கடந்த ஆண்டு அறிவிப்பு மட்டுமே உள்ளது. இதனால், தாங்கள் விரும்பும் தனியார் பள்ளிகளில், குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோர் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை முடிந்ததாக கூறப்படும் நிலையில், அரசு உடனடியாக அறிவிப்பை வெளியிட்டு, ஏழை குழந்தைகளை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது குறித்து, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு, புதிய கல்விக் கொள்கையை செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மத்திய அரசு, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்துக்கான நிதியை வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதனால், இந்த திட்டத்தின் கீழ், 8,000 பள்ளிகளில் படித்த, 750,000 குழந்தைகளுக்கு நிதி வழங்க முடியவில்லை. எனவே, இந்த ஆண்டு சேர்க்கையை துவக்குவதில் தாமதமாகிறது.

'மத்திய அரசு நிதி வழங்காததால், ஆர்.டி.இ., மாணவர்களுக்கான கல்வியை செயல்படுத்த முடியாத நிலை உள்ளது' என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ், சட்டசபையில் தெரிவித்து உள்ளார். எனினும், மத்திய அரசின் நிதியை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

திமுக அரசு பொறுப்பேற்ற 2021 ஆம் ஆண்டிலிருந்தே இந்த RTE திட்டத்தை முடக்குவதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2013 - 14 ஆம் ஆண்டில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்த வேகம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அந்த காலகட்டத்தில் இந்த திட்டத்திற்கான நிதி உரிய நேரத்தில் பெறப்பட்டு. ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு ஈடு செய்து வந்தது. 

 ஆனால் தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததிலிருந்து தான் இந்த நிதி பெறுவதில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.

2021- 22ம் நிதி ஆண்டில் எல்லா மாநில அரசுகளும் இதற்கான நிதியை முழுமையாக 100 சதவீதம் வழங்கிய நிலையில் தமிழக அரசு மட்டும் 75% மட்டுமே பள்ளிகளுக்கு ஈடு செய்தது. மீதி 25% தொகையை வழங்காமலே ஏமாற்றிவிட்டது. என்கிற குற்றச்சாட்டு தமிழக அரசின் மீது இருக்கிறது.

 அதனைத் தொடர்ந்து 22 -23ஆம்  ஆண்டிற்கான தொகை மட்டும் வழங்கப்பட்டுள்ளது. 23- 24 மற்றும் 24-25 ஆம் ஆண்டுகளுக்கான கல்வி கட்டண பாக்கி 1000 கோடி ரூபாய் வழங்கப்படாமலே இருக்கிறது. இதில் கூட LKG , UKG வகுப்புகளுக்கான கட்டணம் வெறும் 6000 என்று நிர்ணயித்து இருப்பது இந்த திட்டத்தை நீர்த்துப் போக செய்யும் செயலாகவே கருதப்படுகிறது.

 அதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது எல்லா மாநிலத்திலும் ஆன்லைன் சேர்க்கை முடிவடையும் நிலையில் தமிழகத்தில் அதற்கான அடிப்படை பணிகளை துவங்காமல் இருப்பது பெற்றோர்கள் மத்தியிலே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 இது ஒரு புறம் என்றால் இந்த திட்டத்தில் சேர்க்கப்படுகிற மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்து ஒரே பள்ளியில் படிக்க முடியாத சூழல் உள்ளது. மாற்று சான்றிதழ் இல்லாமல் யார் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்கிற நிலை உள்ளதால் LKG வகுப்புகளில் சேர்க்கப்படுகிற மாணவர்கள் எட்டாம் வகுப்பு வரை தொடர முடியாத நிலை உள்ளது. இதனால் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த திட்டத்திலிருந்து வெளியேறி விட்டார்கள். இது இந்த திட்டத்திற்கு கிடைத்த தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும். அதற்கு காரணம் அரசாங்கத்தின் செயல்பாடுகள் தான் என்று குற்றம் சாட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

அதற்கு ஏற்றார் போல் இந்த ஆண்டு தொடங்க வேண்டிய RTE சேர்க்கைக்கான ஆன்லைன் பதிவு இன்னும் தொடங்காமல் இருப்பது, பெற்றோர்கள் தினம் தோறும் பிரவுசிங் சென்டர்களுக்கு சென்று வெறுங்கையோடு திரும்பி வருவது வேதனை அளிக்கின்ற செயலாக உள்ளது.

RTE சேர்க்கை ஆன்லைனில் தொடங்க வேண்டும் என்று சொன்னால் அதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட இயக்குனரிடமிருந்து எல்லா மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும். அதன் அடிப்படையில் EMIS இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிக்கான இன்டெக் கெபாசிட்டி பதிவு செய்ய வேண்டும், RTE Admission உள்ள பள்ளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும். ஆன்லைனில் அட்மிஷன் தொடங்க வேண்டும் ஆனால் இந்தப் பணிகள் எதுவும் இதுவரை தொடங்கப்பட்டதற்கான அறிகுறிகளை தென்படவில்லை. 

எனவே இந்த ஆண்டு RTE மாணவர்கள் சேர்க்கை உண்டா? இல்லையா? என்கிற குழப்பத்தில் பெற்றோர்கள் மட்டுமல்ல பள்ளி நிர்வாகிகளும் காத்திருக்கிறார்கள். தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது? எப்போது அறிவிக்கிறது என்பதுதான் தற்போது அனைவரின் கேள்வியாக உள்ளது.