தமிழக அரசிடம் போய் சொல்லுங்க'.. திருமாவிடம் கொந்தளித்த நிர்மலா...!?

தமிழக அரசிடம் போய் சொல்லுங்க'.. திருமாவிடம்  கொந்தளித்த நிர்மலா...!?

லோக்சபாவில் சிதம்பரம் தொகுதியின் எம்பியும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல் திருமாளவன் பேசினார்.

அப்போது அவர், ''இந்திய ஒன்றிய அரசு போதைப்பொருளையும், சாராயத்தையும் முழுமையாக நீக்குவதற்கு, விலக்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 1954ல் ஒரு கமிட்டி உருவாக்கப்பட்டது. மதுவிலக்கு விசாரணை குழு. அது அளித்த அறிக்கையை 1958-ம் ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தது. ஆனால் இந்திய ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

அதேபோல் 1944ம் ஆண்டில் Uniform Civil Code உருவாக்க வேண்டும் என கூறப்பட்ட ஆர்ட்டிக்கிளை எடுத்து கொண்டு அதனை செயல்படுத்த முயல்கிறது. நான் இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகுவதை எண்ணி கவலைப்படுகிறேன். இந்த அரசுக்கு அதுதொடர்பான வேதனை இருக்கிறதா? என்பதை கேள்வி எழுப்புகிறேன். மனிதவளம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. போதைப்பொருள் என்பது இங்கொன்றும், அங்கொன்றுமாக இல்லை. இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மிக தாராளமாக புழக்கத்தில் உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது.

4 மாநிலங்களை தவிர எல்லா மாநிலங்களிலும் அரசு மதுபானம் விற்பனை செய்கிறது. இது நாட்டுக்கு அரசு செய்யும் மிகப்பெரிய துரோகம். இளைஞர்களுக்கு செய்கிற துரோகம். மனிதவளத்தை சிதைப்பதற்கான நடவடிக்கை. எனவே தேசிய மதுவிலக்கிற்கு அரசு ஒரு கொள்கையை கொண்டு வந்து இந்தியா முழுவதும் மதுவிலக்கை அமல்படுதுத வேண்டும்'' என்று பேசினார்.

இதையடுத்து திருமாவளவனுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். இதுதொடர்பாக அவர், ''தொல் திருமாவளவன் பேசியுள்ளார். இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொண்டு வர தெரிவித்துள்ளார். அதேபோல் போதை பொருள் நடமாட்டம் இல்லாத நாடாக மாற்ற கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அவரது கவலையை பகிர்ந்து இருப்பதை நான் வரவேற்கிறேன்.

ஆனால் அவரது கட்சி கூட்டணியில் உள்ள ஒரு கட்சியின் ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. அங்கு 56 பேர் கள்ளச்சாராயம் குடித்து பலியாகி உள்ளனர். இதனால் நீங்கள் முதலில் அறிவுரைகளை தமிழ்நாட்டுக்கு சொல்ல வேண்டும். அங்கு முதலில் பேச வேண்டும். போதைப்பொருள் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது. இதனை தவிர என்னால் எதுவும் சொல்ல முடியாது'' என்றார். இந்த வேளையில் தமிழ்நாடு கள்ளச்சராயம் பலி பற்றி நிர்மலா சீதாராமன் கூறியதற்கு திமுக, காங்கிரஸ் உள்பட கூட்டணி கட்சியினர் நிர்மலா சீதாராமனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர். இதனால் லோக்சபாவில் பெரும் பரபரப்பு உருவானது.