வெற்றிலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

 வெற்றிலையில் இத்தனை மருத்துவ குணங்களா?

லையாகவே தோன்றி இலையாகவே தனது வாழ்க்கையை முடித்துக் கொள்வதால் இதனை, ‘கன்னி இலை’ என்கிறார்கள். இதற்கு நாகவள்ளி, வேந்தன் என்ற பெயரும் உண்டு. அதுதான் தமிழ் கலாசாரத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம்பெறும் வெற்றிலை. 

இது ஒரு சடங்கு பொருள் மட்டுமல்ல, மருத்துவ குணங்கள் கொண்டதும் கூட. வெற்றிலை என்பது பைப்பரேசி என்ற இனத்தைச்சேர்ந்த ஒரு கொடியாகும். அதனால்தான் வெற்றிலை கொடி என்கிறார்கள். வெற்றிலையின் காரத்திற்கும், மணத்திற்கும் காரணமாக இருப்பது அதிலுள்ள ‘யுஜெனால்’ எனும் ஒரு வகை எண்ணெய்யே ஆகும். ‘பைப்பரிக்’என்ற அமிலமும் வெற்றிலையில் உள்ளது. இந்த இரண்டும்தான் ஜீரண சக்திக்கு காரணமாக உள்ளது. பொட்டாசியம் நைட்ரேட் என்னும் உப்புச்சத்தும் வெற்றிலையில் உள்ளது.

காசம், சளி, இருமல், மூச்சு முட்டல், சீதக்கடுப்பு, அஜீரணம் போன்ற பல நோய்களுக்கு வெற்றிலை சாறு பயன்படுகிறது. சில குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், கப இருமல், வெற்றிலை சாறுடன் தேன் கலந்து அல்லது துளசி சாறு குழந்தைகளுக்கு கொடுக்க மூச்சுத்திணறல், கோழைக்கட்டு முதலியவற்றை போக்கவும் வெற்றிலை உதவுகிறது. தேள் கடிக்கு வெற்றிலை நல்ல மருந்து. இரத்த கொதிப்பு அதிகமாகி சிலருக்கு திடீரென மயக்கம் வரும், அதற்கு வெற்றிலை பாக்கு போடுவது நல்ல பலனை தரும். காரணம், அதிலுள்ள குரோமியம் உப்பு.

இரத்த புற்றுநோயின் லூக்கோமியா செல்களை வெற்றிலையின் குளோரோஜெனிக் ஆசிட் மூலக்கூறு (ஐசிபி 101) தாக்கி அழிப்பதை இந்திய வேதி உயிரியல் நிறுவன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். செரிமான ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும். வெற்றிலை ஒரு சிறந்த வலி நிவாரணியும்கூட. நமது உடலில் வெட்டுக்கள், சிராய்ப்புகள், தடிப்புகள் ஏற்பட்டால், அந்த வலிகளைப் போக்க இந்த வெற்றிலையை பயன்படுத்தலாம். இதை அளவோடு சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடும் நீங்கும். இந்த வெற்றிலையை வெறுமனே மென்று சாப்பிட்டாலே, வயாகராவுக்கு இணையான சக்தி கிடைக்குமாம். உடலுக்கு வெப்பம் தரும் இந்த வெற்றிலையானது, தாய்ப்பால் சுரப்பியாகவும், வாய் நாற்றத்தை போக்குவதாகவும். மூளை, இதயம், கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றை பலப்படுத்தி ஆரோக்கியத்தை தரக்கூடியதாகவும் உள்ளது.

பெருகி வரும் ஆண் மலட்டுத் தன்மை, குறிப்பாக விந்தணு உற்பத்தி மற்றும் அதன் வீரியம் குறைதல் இவற்றுக்கு தாம்பூலம் மிக சிறந்த மருந்து. வெற்றிலையில் உள்ள Hydroxy Chavicol எனும் பொருளானது ஆண்களின் புரோஸ்டேட்டை வலுப்படுத்துகிறது, மேலும் புரோஸ்டேட் புற்று நோய் வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.

வெற்றிலை மிகப் பெரும் மருத்துவ குணங்கள் கொண்டது. இதன் மூலம் 50 வகையான நோய்களை குணப்படுத்த முடியும் என்கிறார்கள். வெற்றிலையில் 84 நீர்ச்சத்தும், 3 சதவீதம் புரதச்சத்தும், 1 சதவீதம் கொழுப்பு சத்தும் இதைத்தவிர, தயாமின், நியாசின், ரிபோஃப்ளேவின், கரோட்டின், கால்சியம், அயோடின், பொட்டாசியம், வைட்டமின் A, B1, B2, C, நிகோடினிக் அமிலம் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்களும் வெற்றிலையில் உள்ளன. உடல் கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கச்செய்வதில், வெற்றிலையின் பங்கு மகத்தானது. வியர்த்தல், சிறுநீர் உற்பத்தியையும் இந்த இலைகள் மேம்படுத்துகின்றன.

இளம் கொழுந்து வெற்றிலையுடன் நான்கைந்து மிளகு சேர்த்து, வாயில் போட்டு மென்று தின்றாலே போதும். உடல் எடை குறையத் துவங்கும். அதுவும் வெறும் வயிற்றில், தொடர்ந்து 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடலிலுள்ள கழிவுகள் நீங்கிவிடும். குடல் வலி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற கோளாறுகளும் நீங்கும். உடலில் உள்ள நச்சுக்களும் வெளியேறிவிடும். இரவு தூங்கப் போகும்போது, 2 வெற்றிலை, 2 மிளகு, 5 உலர் திராட்சை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று வருவது, உடல் எடை குறைப்புக்கு வழிவகுக்கும்.

வெற்றிலையை பச்சையாக மென்று சாப்பிட வேண்டும். இதனால் மூல நோயின் தாக்கத்தால் ஆசன வாய்ப் பகுதியில் வலி, எரிச்சல் ஆகியவை குறைவதோடு வீக்கங்களையும் குறைக்கும். 3 அல்லது 4 வெற்றிலைகளை சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து ஆசனவாயில் அப்ளை செய்து வந்தால் மூலத்தால் ஏற்பட்ட வீக்கம் குறையும்.

ஒரு பாத்திரத்தில் வெற்றிலை 2 போட்டு கொதிக்க விட்டு காலை, மாலை என இரண்டு வேளைகளும் குடித்து வந்தால் மூல நோய் இடம் தெரியாமல் மறைந்து விடும். குடல் சுருக்கம், வயிறு வலி, சாப்பிட முடியாமல் சிரமப்படுதல் ஆகிய வியாதிகளுக்கும் வெற்றிலையில் தீர்வு இருக்கின்றது. வெற்றிலையை பாக்கு கலந்து பீடா போல் சாப்பிடுவதை விட தனியாக சாப்பிடுவதால் ஏகப்பட்ட பலன்களை பெற்றுக் கொள்ளலாம். நரம்பு மண்டலத்துக்கு பலம் கொடுப்பதால் படிக்கும் குழந்தைகளுக்கு வெற்றிலை சாறு கொடுத்து வர, ஞாபக சக்தியை அதிகரிக்கும். வயிற்றுப்புண், வாய்ப்புண், வாயில் துர்வாடை பிரச்னையை வெற்றிலை நீக்குகிறது.