தருமபுரியில் 147 தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்.....!!

 தருமபுரியில் 147 தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்.....!! 

தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளை மாணவ, மாணவிகளின் நலன் கருதி ஒவ்வொரு ஆண்டும் பேருந்துகளின் தரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இதனையடுத்து தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி மற்றும் காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் பேருந்துகளின் தரம் குறித்து, போக்குவரத்து துறை ஆய்வு செய்து வருகிறது.

தருமபுரி அரசு கலை கல்லூரி மைதானத்தில் இன்று 147 தனியார் பள்ளிகளின் பேருந்துகள் தரம் குறித்த ஆய்வு நடைபெற்றது. இந்த தனியார் பள்ளி பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி செய்தார். இந்த ஆய்வில் பேருந்துகளில் முதலுதவி பெட்டி, அவசர கால கதவு, படிக்கட்டின் உயரம், ஓட்டுநர்கள் கண் பார்வை, ஜிபிஆர்எஸ் 

கருவி, இருக்கைகள் வசதி, தீயணைப்பு கருவிகள், சிசிடி கேமரா உள்ளிட்ட பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு குறித்து 23 சிறப்பு அம்சங்கள் முறையாக உள்ளதா எனவும், பள்ளி வாகனங்களில் உள்ள படிக்கட்டுகள் சிறு குழந்தைகள் ஏறுவதற்கு வசதியாக உள்ளதா என மாவட்ட ஆட்சியர் ஆய்வுகள் மேற்கொண்டார். அதேப்போல் பேருந்துகளில் பின்பக்க கேமரா உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் முறையாக பராமரிக்காமல், அரசு விதிகளை பின்பற்றாத பேருந்துகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதனை சரி செய்த பிறகு பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து பள்ளி வாகனங்களை இயக்கக்கூடிய ஓட்டுநர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஓட்டுனர்கள் வயது முதிர்ந்தவர்களாக இருக்கக் கூடாது. அவர்களது கண் பார்வை, செவிதிறன் சரியாக இருக்க வேண்டும். அதேபோல் ஓட்டுநர்களுக்கு முழு முழு உடல் பரிசோதனையை செய்திருக்க வேண்டும். மேலும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் பேருந்துகளில் கட்டாயம் உதவியாளர்கள் இருக்க வேண்டும். அதேப்போல் பள்ளி மாணவர்களை ஏற்றும் பொழுதும், இறக்கும் போதும் மிகவும் கவனமாக கண்காணித்து வாகனங்களை இயக்க வேண்டும். மேலும் அவசர வழிகளை முறையாக பராமரித்து வைத்திருக்க வேண்டும். அதனை மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் தெரிவிக்க வேண்டும். மேலும் தீ தடுப்பு உபகரணங்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் வகையில் ஓட்டுநர்கள் பயிற்சி அளிக்க வேண்டும் என ஓட்டுனர்களிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், ஆய்வாளர் தரணிதரன், வெங்கிட்டுசாமி உள்ளிட்ட அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.