இந்தி எதிர்ப்பு எங்கே போனது...? எல்லாமே ஏமாற்று வேலையா....?!
இந்தி மொழியை தூக்கி பிடித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பேசிய போது "இந்தியா" கூட்டணியை விட்டு திமுக வெளியேறி இருக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் "இந்தியா" கூட்டணியின் 4-வது ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜேடியூ தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் இந்தி மொழியில் பேசத் தொடங்கினார். அப்போது திமுக தரப்பில் ஆங்கில மொழி பெயர்ப்பு கேட்கப்பட்டது. திமுக தலைவருமான முதல்வருமான மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டிஆர் பாலு இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர். முந்தைய இந்தியா கூட்டணி கூட்டங்களைப் போலவே ஜேடியூவின் மனோஜ் ஜா ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.
ஆனால் நிதிஷ்குமாரோ கோபமடைந்து, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி. அனைவரும் இந்தி படிக்க வேண்டும். எதற்கு ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பு? நிறுத்துங்க என ஆவேசப்பட்டார். டெல்லியில் நிதிஷ்குமாரின் இந்த ஆவேசம்தான் இப்போது பேசுபொருளாகி இருக்கிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது எக்ஸ் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: ஹிந்தி, இந்தியாவின் தேசிய மொழி என்கிறார் INDI கூட்டணியின் தலைவர்களில் ஒருவரான நிதிஷ் குமார் அவர்கள். ஹிந்தியை தூக்கிப்பிடித்தும், மற்ற மொழிகளை அவமானப்படுத்தியும் அந்த கூட்டத்தில் தொடர்ந்து கலந்து கொண்டிருக்கிறது தி மு க .
தமிழுக்காக, தமிழர்களுக்காக, தமிழ் மொழிக்காக இருப்பதாக மார்தட்டி கொள்ளும் தி மு க, கூட்டணி கூட்டத்தில் ஹிந்தி தேசிய மொழி என்றும் மற்ற மாநிலத்தவர்களை அவதூறு செய்தும் அமைதி காத்தது என்? தமிழை விட ஹிந்தி உயர்ந்தது என்றெண்ணி ஹிந்திக்கு அடிமையாகி விட்டதா தி முக? கூட்டணிக்காக தமிழ் மொழியை அடகு வைக்க துணிந்து விட்டதா திமுக?
உண்மையிலேயே தமிழுக்காக எதையும் செய்ய தயாராயிருக்குமானால், இந்நேரம் INDI கூட்டணியை விட்டு வெளியேறியிருக்கும் அல்லது நிதிஷ் குமார் கட்சியை INDI கூட்டணியை விட்டு வெளியேற்ற முனைந்திருக்கும். ஆனால், ஹிந்திக்கு குடை பிடித்து, சாமரம் வீசி, தமிழை புறந்தள்ளும் திமுக விற்கு இனியும் தமிழ் குறித்து பேசும் தகுதி இல்லை. இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இந்தி எதிர்ப்பு எங்கே போனது...? எல்லாமே ஏமாற்று வேலையா....?! என்கிற கேள்வி எதிர் தரப்பில் இருந்து மட்டுமல்ல.... பொதுமக்களிடமிருந்தும் எழுந்துள்ளது.