குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பா.ஜ.க...! சர்வே முடிவுகள் சொல்வது என்ன...?

 குஜராத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் பா.ஜ.க...! சர்வே முடிவுகள் சொல்வது என்ன...?

காந்திநகர்: குஜராத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன.

182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் வரும் டிச. 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச. 8இல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.

பிரமதர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் குஜராத்தில் நிச்சயம் வென்று ஆட்சியைப் பிடித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் பாஜக களமிறங்குகிறது. அங்கு இப்போது பூபேந்திர படேல் முதல்வராக உள்ளார்.

பாஜக ஆட்சி மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும் இதனால் ஆட்சி மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்றும் அம்மாநில காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இடையில் ஆம் ஆத்மி கட்சியும் பஞ்சாபைப் போலவே முத்திரை பதிக்கலாம் என்ற நம்பிக்கையில் குஜராத்தில் ஆதரவைத் திரட்ட முயன்று வருகிறது. அக்கட்சியின் அரவிந்த் கெஜ்ரிவால் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், பஞ்சாபைப் போலக் குஜராத்தில் அவரால் வெல்ல முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இந்தச் சூழலில் குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்து இந்தியா டிவி- மேட்ரைஸ் இணைந்து நடத்திய புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது. அதில் பாஜக பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எளிதாகப் பெற்று பெற்றி பெறும் என்று கூறப்பட்டு உள்ளது. கடந்த முறை 99 இடங்களை மட்டுமே பாஜக வென்றிருந்த நிலையில். இந்தத் தேர்தலில் பாஜக சுமார் 104 முதல் 119 இடங்களில் வெல்லும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் கடந்த தேர்தலில் 77 இடங்களில் வென்ற காங்கிரஸ், இந்த முறை 53-68 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனக் கூறப்பட்டு உள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கும் ஆம் ஆத்மி வெறும் 0-6 இடங்கள் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டு உள்ளது. இதர கட்சிகளும் சுயேச்சைகளும் 0-3 இடங்களில் வெல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது. வாக்கு சதவீதம் வாரியாக பார்க்கும்போது, பாஜக 49.5 சதவீதமும், காங்கிரஸ் 39.1 சதவீதமும், ஆம் ஆத்மி கட்சி 8.4 சதவீதமும் வாக்குகளைப் பெறும். கடந்த 2017 சட்டமன்றத் தேர்தலில் பாஜக 49.05 சதவீத வாக்குகளையும், காங்கிரஸுக்கு 41.44 சதவீத வாக்குகளையும் பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

பிராந்திய வாரியாக பார்க்கும் போது. 61 இடங்களைக் கொண்ட மத்திய குஜராத்தில், பாஜக 41, காங்கிரஸ் 19, மற்றவை 1 இடங்களைப் பெறும். 54 இடங்களைக் கொண்ட சவுராஷ்டிரா-கட்ச் பகுதிகளில் பாஜக 30 இடங்களையும், காங்கிரஸ் 21 இடங்களையும், ஆம் ஆத்மி 3 இடங்களையும் பெறலாம். தெற்கு குஜராத்தில் (மொத்தம் 35 இடங்கள்) பாஜக 26 இடங்களும், காங்கிரஸ் 6 இடங்களும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களும் பெறும். 32 இடங்களைக் கொண்ட வடக்கு குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இரண்டும் தலா 16 இடங்களைப் பெறும்.

முதல்வர் பதவிக்கு யார் சரியான நபராக இருப்பார் என்ற கேள்விக்கு 32% பேர் தற்போதைய முதல்வர் பூபேந்திர படேலுக்கே ஆதரவு தெரிவித்து உள்ளனர். அவரை தொடர்ந்து 7% ஆதரவுடன் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் இசுதன் காதவி இரண்டாவது இடத்திலும் 6% ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில் மூன்றாவது இடத்திலும் உள்ளார். அதேபோல தற்போதைய முதல்வர் பூபேந்திர படேலின் செயல்பாடுகள் சூப்பராக இருப்பதாக 30% பேரும், சுமாராக இருப்பதாக 39% பேரும் மோசமாக இருப்பதாக 28% பேரும் கருத்து தெரிவித்து உள்ளனர்.

குஜராத்தில் தற்போது தேர்தலில் மூலம் மாற்றம் வேண்டுமா என்ற கேள்விக்கு, 34 சதவீதம் பேர் மாற்றம் தேவை எனக் கூறியுள்ளனர். 48 சதவீதம் பேர் திருப்தி இல்லை என்றாலும் மாற்றம் வேண்டாம் எனக் குறிப்பிட்டு உள்ளனர். அதைத் தொடர்ந்து 16 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், மாற்றத்தை விரும்பவில்லை என்றும் கூறியுள்ளனர். மேலும், மோடி இந்தத் தேர்தலில் கேம் சேன்ஞராக இருப்பாரா என்ற கேள்விக்கு 46% பேர் ஆம் என்று தெரிவித்து உள்ளனர்

இந்த தேர்தலில் முக்கிய பிரச்சினைகள் குறித்துக் கேட்டதற்கு, 44 சதவீதம் பேர், 'நரேந்திர மோடியை ஆதரிப்பதா அல்லது எதிர்ப்பதா' என்பதைச் சுற்றியே தேர்தல் இருக்கும் எனத் தெரிவித்துள்ளனர். 14 சதவீதம் பேர், 'மத்திய, மாநிலத் திட்டங்களின் பலன்' முக்கியப் பிரச்சினையாக இருக்கும் என்று கூறியுள்ளனர். 8 சதவீதம் பேர் விலைவாசி உயர்வையும், 8 சதவீதம் பேர் மாநில அரசின் செயல்பாடுகளையும், 5 சதவீதம் பேர் உள்ளூர் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளையும், 5 சதவீதம் பேர் வேலையில்லா திண்டாட்டத்தையும் முக்கிய பிரச்சினையாகத் தெரிவித்து உள்ளனர்.

குஜராத்தில் மாநில பாஜக அரசு மீதான அதிருப்தி அதிகமாக இருக்கும் நிலையில், அதை எப்படிச் சமாளிக்க முடியும் என்ற கேள்விக்கு, 43 சதவீதம் பேர் மோடியின் பெயரில் வாக்குகளைக் கேட்கலாம் என தெரிவித்தனர். மேலும், 25% பேர் செயல்படாத எம்எல்ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பு அளிப்பதைத் தடுக்கலாம் என்றும் 15 சதவீதம் பேர் தீவிர பரப்புரை மூலம் சரி செய்ய முடியும் எனத் தெரிவித்து உள்ளனர்