கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு : ஆடு, மாடுகளுடன் மீண்டும் ஊரை காலி செய்த கிராம மக்கள்...!?

 கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு : ஆடு, மாடுகளுடன் மீண்டும் ஊரை காலி செய்த கிராம மக்கள்...!?

ஒசூர் அருகே கல் குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மீண்டும் 2வது முறையாக ஊரை காலி செய்து விட்டு தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளுடன் வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஓசூர் அருகே உள்ள கொரட்டகிரி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த கிராமத்தை சுற்றி 6 கல் குவாரிகள் உள்ளது. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லி கற்களை ஏற்றி கொண்டு டிப்பர் லாரிகள் கொரட்டகிரி கிராமத்திற்குள் செல்வதால் கிராம சாலைகளை பழுதடைந்து, கிராமம் முழுவதும் மாசடைந்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது கிராமம் வழியாக டிப்பர் லாரிகள் வந்து செல்ல கூடாது என கூறி கிராம மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். 


அதிகாரிகள் தலைமையிலும் சமாதான கூட்டங்கள் நடத்தப்பட்ட போதும் இதுவரை எந்த தீர்வும் எட்டப்படவில்லை. டிப்பர் லாரிகள் செல்வதை அதிகாரிகள் தடுக்காததால் கொரட்டகிரி கிராமத்தில் வாழும் பொதுமக்கள் கடந்து சில நாட்களுக்கு முன்பு ஊரை காலி செய்து கால்நடைகள் மற்றும் உடமைகளுடன் வெளியேறினர். கிராமத்திலிருந்து ஓசூர் சாராட்சியார் அலுவலகத்தில் குடியேற சென்ற கிராம மக்களை போலீசார் தடுத்து சமாதானம் செய்தனர் இதனை அடுத்து அவர்கள் போராட்டம் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்படாமல் தொடர்ந்து டிப்பர் லாரிகள் கிராமம் வழியாக சென்று வந்ததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 2வது முறையாக இன்று ஊரை காலி செய்து விட்டு தங்களது குழந்தைகள் மற்றும் கால்நடைகளை உடன் அழைத்து கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் ஊரை காலி செய்தனர். பின்னர் ஊரின் அருகே சாலையோரம் இருந்த அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து அனைவரும் தங்கினர். மாலை வரை போராட்டம் தொடர்ந்து நடந்தது. கொட்டும் மழையில் மக்கள் குடிசையில் தங்கியிருந்தனர்.

இதுகுறித்து அறிந்த தேன்கனிக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் முரளி, தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் கிராம மக்கள் சமாதானம் ஆகாமல் அப்பகுதியில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. போராட்டம் காரணமாக உடனடியாக குவாரிகளுக்கு செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டன.

B. S. Prakash