அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆப்பு: இலவச லேப்டாப் இன்னும் இல்லை....?

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த ஆப்பு:  இலவச லேப்டாப் இன்னும் இல்லை....?

தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச லேப்டாப் திட்டம் தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், நிறுத்தப்படலாம் என்கிற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் 2011 சட்டப்பேரவை தேர்தலின் போது மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று அதிமுக, திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தன. இதனை அடுத்து ஆட்சிக்கு வந்த அதிமுக 2011 செப்டம்பர் 15ம் தேதி , 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதன் மூலம் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். தொடர்ந்து மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்ட நிலையில் 2019 கொரோனா தாக்கத்தால் கம்ப்யூட்டரின் மூலப்பொருட்கள் உற்பத்தி முடங்கியது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து உற்பத்தி இயல்புநிலை திரும்பிய போதும் லேப்டாப் செயல்பாட்டிற்கு மிக முக்கிய பொருளான செமி கண்டக்டர்கள் எனப்படும் குறை கடத்தி பற்றாக்குறை நிலவுகிறது.

ஐசி என்றழைக்கப்படும் இந்த செமி கண்டக்டர்களை மடிக்கணினிகளை முழுவதுமாக இயக்கம் திறன் கொண்டது. லேப்டாப்பின் மூளையாக பார்க்கப்படும் செமி கண்டக்டர் உற்பத்தியை விட தற்போது சர்வதேச சந்தையில் அதன் தேவை மிக அதிகரித்துள்ளது. இதனால் அதன் விலையும் முன்பை விட அதிக அளவு உயர்ந்திருக்கிறது. இதனால் தமிழக அரசின் இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தில் ஏற்கனவே பங்கேற்ற லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் கூட புதிய டெண்டரில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது .

அரசின் எல்காட் நிறுவனம் வாயிலாக டெண்டர்கள் கோரப்பட்டும் லேப்டாப் நிறுவனங்கள் பின்வாங்கியதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் பள்ளியில் கூடுதல் கம்ப்யூட்டர்களை வாங்கி மாணவர்களிடம் கணினி அறிவையும், திறனையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச சந்தையில் செமி கண்டக்டர்கள் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்பினால், மீண்டும் இலவச லேப்டாப் வழங்குவது சிக்கல் இருக்காது என துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர். 2019 முதல் கடந்த மூன்று ஆண்டுகளாக 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படாமல் உள்ளது. மேலும் நடப்பு கல்வி ஆண்டிலும் இலவச லேப்டாப் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. எனவே திட்டத்தை அரசு தொடருமா என்கிற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.