பள்ளிக்கல்வித்துறையில் ஆணையர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதலாய் ..,!?

பள்ளிக்கல்வித்துறையில்  ஆணையர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட நாள் முதலாய் ..,!?

1. கல்வித் துறையை சார்ந்தவர்களோ,  பொதுமக்களோ,  பெற்றோர்களோ‌ மற்றும் மாணவர்களோ  பள்ளிக்கல்வி ஆணையரை எளிதில் சந்திக்க இயலாத நிலை இப்போதுள்ளது.

2. அப்படியே மாதக்கணக்கில் காத்திருந்து சந்தித்தாலும் அவர்களுடைய கோரிக்கைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுவதில்லை..

3. நிர்வாக சீர்திருத்தம் மேற்கொள்ளும்போது,  பள்ளிக்கல்வி இயக்ககத்தில் அனுபவத்துடன் பணியாற்றும் இயக்குனர்களையோ, இணை இயக்குனர்களையோ எந்தவொரு முடிவெடுக்கும்போதும் கலந்தாலோசிப்பதில்லை..

3. பள்ளிக்கல்வித் துறையில் இதுவரை வரலாற்றில் இல்லாத,

ஆசிரியருக்கான மாறுதல் கலந்தாய்வில் பல குழப்பங்களும் , பல மாற்றங்களும் நாளுக்கு ஒரு ஆணைகளும்,  நாளுக்கு ஒரு ரத்து செய்யப்பட்ட ஆணைகளும்  வந்து குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பது....

4.  2022  ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் இதுநாள்வரை , நான்குமுறை கலந்தாய்வு அட்டவணை மாற்றப்பட்டுள்ளது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்..

5. பள்ளிக்கல்வித் துறையின் பல முடிவுகள் அவசரகதியில், மாண்புமிகு அமைச்சர்  அவர்களிடம் கலந்தாலோசிக்காமல்   எடுக்கப்பட்டு, பின் மறுநாளில் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுவது தொடர்கதையாகி விட்டது.

6. மற்ற துறைகள் போல் அல்லாமல் பள்ளிக்கல்வித்துறைக்கு ஒரு மாண்பும், பெருமையும் உள்ள நிலையில் , ஐஏஎஸ் அலுவலர்கள் திறமை வாய்ந்தவர்கள்  என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் கூட, பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர்களாக பணிபுரிந்து அனுபவத்தின் அடிப்படையில், மாவட்டக் கல்வி அலுவலர்களாகவும், முதன்மைக் கல்வி அலுவலர்களாகவும், இணை இயக்குனர்களாகவும் பதவி உயர்வு பெற்று , தொடர்ச்சியான பல அனுபவத்தின் வாயிலாக கீழ்நிலைப் பணியிலிருந்து பெற்ற அனுபவத்தின் வாயிலாக பதவி உயர்வு பெறும் பள்ளிக்கல்வி  இயக்குனரால் மட்டுமே மாநிலம் முழுவதுமான நிர்வாகத்தை சிறப்பாகவும், எவ்வித இடையூறுமின்றி மேற்கொள்ள இயலும் என்பதற்கு கடந்த நாட்களில் நடைபெற்றுள்ள அநேக சம்பவங்களே உதாரணங்களாகும்.

7. அனைத்துத் தேர்வுகளும்  முக்கியத்துவம் வாய்ந்தது என்ற  நிலையில், திருப்புதல் தேர்வு என்ற பெயரில் மாநில முழுமைக்குமான ஒரு தேர்வை முக்கியத்துவம் வாய்ந்தது,  முக்கியத்துவம் வாய்ந்தவை அல்ல என மாற்றி மாற்றி அறிவிப்பு செய்தது, உள்ளிட்ட தொடர்ச்சியான பல குழப்பங்கள்... 

8. முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில், புள்ளி விவரங்களை சேகரித்தல் மற்றும் EMIS தரவுகள் மட்டுமே உள்ளடக்கிய புள்ளி விவரங்களை தொகுப்பதிலுள்ள பணிகளை முடிக்காத தாமதத்திற்கான காரணத்தை மட்டும் வினவி ,  மாணவர்கள் எப்படி படிக்கிறார்கள்? மாணவர்களின் கற்றல்- கற்பித்தல் திறன்கள் மேம்பாடு சார்ந்து அவர்களின் அடைவுத்திறன்களை எவ்வாறு மேம்படுத்த இயலும்? என்பது உள்ளிட்ட மாணவர்களின் கற்றல் அடைவு பற்றிய  ஆய்வினை மேற்கொள்ளாமல் முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை பற்றி விவாதிப்பது...

9. பள்ளிக்கல்வி இயக்குனர் பெருமக்களும், இணை இயக்குனர் பெருமக்களும், பள்ளிக்கல்வி ஆணையரை எளிதில் அணுகி முக்கிய சில விஷயங்களைக் கூட தெரிவிக்கவோ,  அதைப்பற்றி எடுத்துக் கூறவோ  வழிவகை இல்லாத சூழல் 

11.பள்ளிக்கல்வித்துறையில்  நினைத்ததை செயல்படுத்தும் அளவிற்கு எந்த ஒரு காரியத்தையும் தான் மட்டுமே செய்துமுடிக்க இயலும் என்கிற ஏகோபித்த,  எதேச்சதிகார  மனநிலை கொண்டவராகவும், தமிழக அரசைக் காட்டிலும்  முழு அதிகாரம் பெற்றவராகவும் மனதில் நினைத்து பள்ளிக்கல்வி ஆணையர் செயல்பட்டு வருதல்...

12. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் ஏற்பட்ட பல குளறுபடிகளுக்கு காரணமாய் அமைந்து,  குறிப்பிட்ட சிலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட நிலையில்,  தான் செய்த தவறுக்காக மாண்பமை உச்ச நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட ஒருவர்,  தமிழக பள்ளி கல்வித்துறையை எங்ஙனம் புதுப்பொலிவுடன், உத்வேகத்துடன் , திறம்பட  செயல்படுத்த இயலும் என்பது அனைவரின் மனதில் உள்ள கேள்வியாகும்...

13. கேட்ட புள்ளி விவரங்களையே மீண்டும் மீண்டும் கேட்டு தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களை மன உளைச்சலில் தினந்தோறும் வைத்துக்கொண்டு எவ்வாறு ஆரோக்கியமான கற்றல் கற்பித்தல் மேம்பாட்டு பணிகளை சாதிக்க இயலும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் மனம்போன போக்கில் செயல்படும் நிலை

14. கல்வித் துறையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் எவ்விதமான மாற்றங்களைக் கொண்டுவர விரும்புகிறார்கள் என்பதை மாநில அளவிலான மாவட்ட அளவிலான வட்ட அளவிலான கல்வி மேம்பாடு மற்றும் ஆலோசனைக் குழுக்களை அமைத்து அவர்களிடம் கருத்துக்களைப் பெற்று அடித்தட்டு கிராமச்சூழலில் இருந்து வரும் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்தி அவர்கள் நீட் மற்றும் எதிர்காலத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகும் சிறந்த செயல் திட்டங்களை தயாரிப்பதில் கவனம் செலுத்தாமல் தகவல் திரட்டும் தகவல் மையமாக பள்ளிக்கல்வி ஆணையரகம் செயல்பட்டு வருவது அனைவரிடமும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது.

15, அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் பள்ளிகளுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையிலும் அதற்கான உடனடியான மாற்று ஏற்பாடுகளாக என்ன செய்வது? குறித்த காலத்தில் கற்றல் திறன்களை மேம்படுத்த தவறும் பொழுது எதிர் காலத்தில் அடுத்தடுத்த வகுப்புகளில் தேவையான திறன்களை கற்பதற்கு போதுமான அடிப்படைத் திறன்களை வளர்த்தெடுக்க இயலாமல் போகும் நிலையில் அவ்வாறான தேர்வில் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகும் நிலையை சரி செய்வது எப்படி என்பதை இதுவரை திட்டமிடாமல் இருப்பது

16,  மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள் கழிப்பறைகள் குடிநீர் வசதிகள் அறிவியல் ஆய்வுக் கூடங்கள் கணினி ஆய்வுக்கூடங்கள் உள்ளனவா என்பதை மிகத்துல்லியமாக ஆய்வுக்குழு அமைத்து ஆய்வு செய்து ஆரோக்கியமான கற்றல் கற்பித்தல் சூழலை உருவாக்க உடனடி செயல்திட்டம் தயாரிப்பதில் கவனம் செலுத்தாமல், புள்ளி விவரங்கள் தயாரிப்பிலேயே மாவட்ட அளவிலான அலுவலர்களையும், இயக்குநர் மற்றும் இணை இயக்குநர்கள் ஆகியோரின் நேரத்தை வீணடிப்பதில் கவனம் செலுத்துவது

17, பெரும்பாலான மாவட்டங்களில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு ஊர்தி வழங்காமல் தினந்தோறும் பணிகளைச் செய்ய வேண்டும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என திரும்பத்திரும்ப ஆணைகள் பிறப்பித்து கொண்டிருக்கும் பொழுது எவ்வாறு அவர்கள் பள்ளிகளை பார்வையிட இயலும் என்பதை அவர்கள் அளவிலான பிரச்சினைகளுக்குக் கூட தீர்வு காணாமல் இருப்பது 

18, வட்டாரக் கல்வி அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் மாவட்டங்களில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பதை கருத்தில் கொள்ளாமல் முழுமையான கட்டமைப்பு வசதிகள் இருப்பதாக பாவித்துக் கொண்டு புள்ளி விவரம் சேகரிப்புப் பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பது

19, ஆசிரியர்களுக்கு தேவையான பயிற்சி என்ன என்பதை திட்டமிடாமல் தொடர்ந்து மாணவர்களின் கற்றல் கற்பித்தல் பணிகள் பாதிக்கும் வண்ணம் திரும்பத்திரும்ப பயிற்சிகளை அளிக்க முற்படுவது. அதற்கு மாறாக ஒரு மாதத்திற்கு ஒரு நாள் மட்டும் பயிற்சி அளிக்க திட்டமிட முனையாமல் இருப்பது..

20, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் சங்கங்களை அழைத்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து தீர்த்து வைப்பதில் கவனம் செலுத்தாமல் அதைப்பெரிதாக்கி அழகு பார்ப்பதிலேயே கவனம் செலுத்துவது

21, ஏற்கெனவே உள்ள விதிகளின்படி செயல்படாமல் திடீரென மனம் போன போக்கில் செயல்முறைகளைப் பிறப்பித்து அதன்படி செயல்பட வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களை நிர்பந்திப்பது

22, எல்லோரும் நிதி சார்ந்த தரவுகளை தினந்தோறும்

பதிவு செய்ய வேண்டும் என  தலைமையாசிரியர்களின் பெரும்பாலான நேரத்தை வீணடித்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை பார்வையிடக்கூட நேரமில்லாமல் விழிபிதுங்கி நிற்கும் அளவிற்கு தேவையில்லாத பணிச்சுமை வழங்குவது...

23, வட்டாரக் கல்வி அலுவலகம் மாவட்டக் கல்வி அலுவலகம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஜமாபந்தி போல் நடத்தி ஆசிரிய பெருமக்களின் பிரச்சனைகளை தீர்வு காண முற்படுவதற்கு ஒரு செயல்திட்டம் வகுத்து செயல்படாமல் வருடக்கணக்கில் ஆசிரியர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்காமல் இருப்பது....

25. பள்ளிக் கல்வித்துறையில் வரலாறு காணாத வகையில் அதிலும் குறிப்பாக ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் மாறுதல் சார்ந்த விவரங்களில்  விதிகளை மீறியும், குழப்பங்கள் நிறைந்த , தெளிவில்லாத செயல்முறை ஆணைகளின் காரணமாக பல வழக்குகள் புதிதாக பதிவு செய்யப்பட்டு வருகின்றன. பல வழக்குகளுக்கு தீர்வு காணப்படாமலும் முடிவு எட்டப்படாமலும் கிடப்பில் போடப்பட்டு வரும் நிலை...

26. ஆசிரியர்களுக்கு பயிற்சி அவசியம்தான்,  ஆனால் கற்றல் கற்பித்தல் பணிகளை  முடிப்பதற்கு நேரமில்லாத நிலையில் , இக்கொரோனா சூழ்நிலையில் ஆசிரியர்களுக்கு சரியான திட்டமிடாமல் பயிற்சி என்ற பெயரில் பல நாட்களை வீணடித்து மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளைக் கேள்விக் குறியாக்கியுள்ள நிகழ்வு தற்போதுதான் நடைபெற்று வருகிறது...

இது போன்ற பல குழப்பங்களும் முடிவு எட்டப்படாத பல கோரிக்கைகளும் தற்போது பள்ளிக் கல்வித் துறையில் நாளுக்கு நாள் பெருகிவருகின்றன...

இதற்கெல்லாம் காரணம் பள்ளிக்கல்வித்துறையில்  இயக்குனர் பணியிடம் நீக்கப்பட்டு ஆணையர் பணியிடம் தோற்றுவிக்கப்பட்ட தாகும்... 

கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய பிழை பள்ளிக்கல்வி ஆணையர் பணியிடத்தை தோற்றுவித்ததேயாகும்...

இதனை தற்போதைய மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் நல்லாட்சியில் நீக்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் மீண்டும் ஆணையர் பணியிடம் ஏற்படுத்தப்பட்டது அனைவருக்கும் பேரிடியான மற்றும் வருத்தமான செய்தியாக அமைந்தது..

எங்கள் தமிழக முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்களுக்கும் மதிப்பிற்குரிய மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சருக்கும் வேண்டுகோளாக சிரம் தாழ்ந்து பணிவுடன் தெரிவித்துக் கொள்வது யாதெனில்

உயிர்காக்கும் மருத்துவ துறைக்கு ஐஏஎஸ் பணியிடம் இயக்குனர் நிலையில் எப்படி சாத்தியமில்லாததோ, அதேபோல் தான் மாணவச் செல்வங்களின் எதிர்கால வாழ்க்கையை நிர்ணயிக்கும் பள்ளிக்கல்வித்துறைக்கு  இயக்குனர் நிலையில் ஐஏஎஸ் பணியிடம் சாத்தியமில்லாதது மட்டுமல்ல சவாலானதும் கூட... பள்ளிக்கல்வித்துறை உயிரை விட மேலானது என்ற நிலையில் அனுபவம் வாய்ந்த இயக்குனர் பணியிடத்தை மீண்டும் தோற்றுவித்து பல லட்சக்கணக்கான மாணாக்கர்களின் வாழ்க்கையில் ஒளிவீச செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறையில் இதுநாள்வரை பணிபுரிந்து பெற்ற அனுபவத்தின் வாயிலாக ,சிரம் தாழ்ந்து, பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறோம்...

நன்றி...

*அனுபவம் நிறைந்த மாணாக்கர் நலனில் அக்கறை கொண்ட ஓர் கல்வியாளன்...*