குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றுமா அதிமுக? குஷி'யில் சுயேச்சைகள்; கலக்கத்தில் தங்கமணி!

குமாரபாளையம் நகராட்சியை கைப்பற்றுமா அதிமுக? குஷி'யில் சுயேச்சைகள்; கலக்கத்தில் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் 5 நகராட்சிகளில் ஒன்றான குமாரபாளையத்தில், 9 சுயேச்சைகள் வெற்றிப்பெற்றிருப்பதால், சுயேச்சைகள் தயவில் தி.மு.கவோ, அ.தி.மு.கவோ சேர்மன் பதவியை பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால், சுயேச்சைகளுக்கு அடித்தது `லாட்டரி' என பேசிக்கொள்கிறார்கள் மாவட்டத்தில். அதேநேரம், அ.தி.மு.க நாமக்கல் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி எம்.எல்.ஏவாக ஜெயித்த தொகுதி என்பதால், தனது தொகுதியின் தலைமையிடத்தை தி.மு.கவிடம் இழந்துவிடுவோமோ? என்று கலக்கத்திலும் ஆழ்ந்துள்ளாராம்.

நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், இராசிபுரம், பள்ளிப்பாளையம், திருச்செங்கோடு, குமாரபாளையம் என்று ஐந்து நகராட்சிகள் உள்ளன. இவற்றில், குமாரபாளையம், பள்ளிப்பாளையம் ஆகிய இரண்டு நகராட்சிகளும், தங்கமணி எம்.எல்.ஏவாக உள்ள குமாரபாளையம் தொகுதிக்குள் வருகிறது. இதில், பள்ளிப்பாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் 13 வார்டுகளில் தி.மு.க வெற்றிப்பெற்று மெஜாரிட்டியாக உள்ளதால், அந்த நகராட்சியை அ.தி.மு.கவால் பிடிக்க முடியாத சூழல். அதேபோல், தங்கமணியின் பூர்வீக வீடு இருக்கும் கிராமத்தை உள்ளடக்கிய ஆலாம்பாளையம் பேரூராட்சியையும் தி.மு.க கைப்பற்றிவிட்டது. இந்த நிலையில்தான், குமாரபாளையம் நகராட்சியில் மொத்தமுள்ள 33 வார்டுகளில், 14 வார்டுகளை தி.மு.கவும், 10 வார்டுகளை அ.தி.மு.கவும், மீதமுள்ள 9 வார்டுகளை சுயேச்சைகளும் கைப்பற்றியுள்ளன. இந்த ஒன்பது சுயேச்சைகளில் 3 வது வார்டில் போட்டியிட்டு வென்றவர், விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த வேல்முருகன்.

குமாரபாளையத்தை கைப்பற்ற தி.மு.கவுக்கு 3 கவுன்சிகலர்களும், அ.தி.மு.கவுக்கு 7 கவுன்சிலர்களும் தேவை. இந்த நிலையில், தி.மு.கவோ அல்லது அ.தி.மு.கவோ நகர்மன்ற தலைவர் பதவியை கைப்பற்ற, சுயேச்சைகளின் தயவை நம்பியிருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுனர். இதுதான், அந்த 9 சுயேச்சைகளுக்கு உற்சாகத்தையும், தி.மு.க, அ.தி.மு.கவினர்களுக்கு திண்டாட்டத்தையும் உருவாக்கியிருக்கிறது.

 குறிப்பாக, அ.தி.மு.க ஆட்சியில் பத்து வருடங்கள் வேலுமணிக்கு இணையாக முக்கிய பவர்சென்டராக வலம் வந்த தங்கமணி, குமாரபாளையத்தை கைப்பற்றுவதை, கௌரவப் பிரச்னையாக பார்க்க ஆரம்பித்திருப்பதாக சொல்கிறார்கள், அவருக்கு நெருக்கமான அ.தி.மு.கவினர். ஏனென்றால், ஏற்கனவே குமாரபாளையம் நகராட்சி தேர்தல், தங்கமணிக்கு 'கடுக்காய்' கொடுத்த வரலாறு இருக்கிறது என்கிறார்கள்.


அதுகுறித்து பேசிய, அ.தி.மு.கவினர் சிலர், ``தங்கமணி தொடர்ச்சியாக 4-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார். அதில், ஒருமுறை மட்டும் திருச்செங்கோடு தொகுதியிலும், அதன்பிறகு தொடர்ச்சியாக 3 வது முறையாக குமாரபாளையம் தொகுதியிலும் அவர் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். 10 ஆண்டுகள் அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். கடந்த பத்து வருட அ.தி.மு.க ஆட்சியில், அதுவும் குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவி வகித்த வரை, ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் இடத்தில், வேலுமணிக்கு இணையாக இருந்து செயல்பட்டவர். ஆனால், குமாரபாளையம் தொகுதி அவருக்கு வெற்றியை தேடி தந்தாலும், குமாரபாளையம் நகராட்சி அவரது காலை வாரவே செய்கிறது.

கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)கே.எஸ்.மூர்த்தி (தி.மு.க நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர்)

கடந்த, 2011 - 2016 - ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், அ.தி.மு.கவில் சீட் கிடைக்காத அதிருப்தியில், குமாரபாளையம் நகராட்சியில் சுயேச்சையாக சிவசக்தி தனசேகரன் என்பவர் போட்டியிட்டார். தவிர, தான் மட்டுமின்றி தனது ஆதரவாளர்களையும் எல்லா வார்டுகளிலும் சுயேச்சைகளாக களம் இறக்கி, ஆளுங்கட்சியான அ.தி.மு.கவையும், அப்போதைய அமைச்சரான தங்கமணியையும் பதறவைத்தார். இதனால், அந்தத் தேர்தலில் குமாரபாளையம் நகராட்சியை அ.தி.மு.க இழந்தது. இதனால், அப்போதைய முதலமைச்சர் ஜெ கோபபார்வைக்கு ஆளாக, தனசேகரனையும், அவரது ஆதரவு கவுன்சிலர்களையும் 'கரெக்ட்' செய்து, அ.தி.மு.கவில் இணைத்தார். அடுத்த, 5 ஆண்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை.

இந்த நிலையில்தான், இம்முறை நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் குமாரபாளையம் நகராட்சி தேர்தல் முடிவும் தங்கமணிக்கு மறுபடியும் கடுமையான டாஸ்க்கை முன்வைத்திருக்கிறது. இந்த சூழல் வந்துவிடக்கூடாது என்பதற்காகதான், தனது ஆதரவாளர்களை வார்டுகளில் நிறுத்தி, வைட்டமின்களை இறக்கி, ஓட்டு வேட்டை ஆட வைத்தாராம். 33 வார்டு வேட்பாளர்களும், பெண்களுக்கு கொலுசு கொடுத்தனர் என்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஆனால், அதை இரண்டு பெண்கள் விற்க முயல, நகைக்கடை ஊழியர் மூலம் அது வெள்ளிக்கொலுசு இல்லை, எவர்சில்வர் கொலுசு என்பது தெரியவந்ததாம். இதனால், வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி உண்டாகியது என்கிறார்கள்.

தி.மு.கவில், நாமக்கல் மேற்கு மாவட்டச் செயலாளர் கே.எஸ்.மூர்த்தி, தங்கமணியோடு 'ரகசிய டீல்' வைத்திருப்பவர் என்று சொல்லப்படுவதால், அவர்கள் தரப்பிலும் பெரும்பான்மையை 'அறுவடை' செய்ய முடியாமல் போனது. இதனால், தி.மு.கவும், அ.தி.மு.கவும் நகராட்சி பதவியை பிடிக்க சுயேச்சைகளின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தி.மு.க தரப்பும், அ.தி.மு.க தரப்பும் சுயேச்சைகளிடம் 'குதிரை பேரம்' நடத்த ஆரம்பித்திருக்கின்றன. 'அடிச்சது லக்கி ப்ரைஸ்;இதுதான் சான்ஸ், லம்பா கேட்டுருவோம்' என்று சில சுயேச்சைகளும் 'உற்சாக மூடு'க்கு வந்திருக்கிறார்கள்.

தனக்கு குமாரபாளையத்தை தக்க வைப்பது, கௌரவப் பிரச்னை என்று தங்கமணி தரப்பு நினைப்பதால், அவர் தரப்பில் சுயேச்சைகளை 'அலேக்காக' தூக்கும் முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்களாம். எடப்பாடி, ஓ.பி.எஸ்., வேலுமணி மாவட்டங்களில் அ.தி.மு.க மண்ணைக் கவ்விய நிலையில், தனது தொகுதியில் உள்ள ஒரு நகராட்சியை கைப்பற்றினால், கட்சியில் தனக்கு பெரிய 'பவர்' கிடைக்கும் என்கிற ரீதியிலும் தங்கமணி கணக்குப் போடுவதாக சொல்கிறார்கள். ஆனால், என்ன நடக்கப் போகுது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்" என்றார்கள்.‘

இதுகுறித்து, தங்கமணி தரப்பில் பேசினால், ``அண்ணனுக்கு இந்த தொகுதியில் தனி செல்வாக்கு இருப்பதால் தான், அவரால் குமாரபாளையம் தொகுதியில் ஹாட்ரிக் வெற்றியை ருசிக்க முடிந்தது. அதனால், குமாரபாளையம் நகராட்சியை பிடிப்பது ஒன்றும் அவருக்கு கடினமில்லை. அதற்காக, சுயேச்சைகளுடன் குதிரை பேரம் நடத்துகிறார் என்பது பொய்யான தகவல். அவர் நேர்மையான வழியில் சுயேச்சைகளிடம் பேசி, அ.தி.மு.கவுக்கு ஆதரவு கோருவார். நிச்சயம் குமாரபாளையம் நகராட்சிக்கு யார் நல்லது செய்தார்கள் என்பதை சீர்தூக்கி பார்த்து, கண்டிப்பாக சுயேச்சைகள் அனைவரும் அ.தி.மு.கவுக்கு தான் ஆதரவு தருவார்கள்" என்றார்கள்.

ராஜேஷ் கண்ணா செய்தி ஆசிரியர்