மீண்டும் நீட் விலக்கு மசோதா!தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதியம் சட்டமன்றத்தில், மாலை ஆளுநர் மாளிகையில்!

மீண்டும் நீட் விலக்கு மசோதா!தமிழ்நாடு சட்டமன்றத்தில் மதியம் சட்டமன்றத்தில், மாலை ஆளுநர் மாளிகையில்!  

 இன்று (பிப்ரவரி 8)நீட் விலக்கு சட்டமசோதா மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

கடந்த 2021 செப்டம்பர் 13-ம் தேதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் விலக்கு சட்டமசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டது.

ஆளுனர் மாளிகையில் இருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு அனுப்பப்பட வேண்டிய அந்த சட்ட மசோதாவை கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி தமிழக ஆளுநர் தமிழ்நாடு சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார்.

இந்த தகவலை பிப்ரவரி 3ஆம் தேதி ஆளுனர் மாளிகை செய்திக்குறிப்பு மூலமாக வெளியிட்டது.

இதையடுத்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசிக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் பிப்ரவரி 5ஆம் தேதி நடந்தது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவும் பாஜகவும் கலந்துகொள்ளவில்லை.

அந்தக் கூட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவின்படி பிப்ரவரி 8ஆம் தேதி மீண்டும் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்ற சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை சபாநாயகர் அப்பாவு கூட்டினார்.

இன்று கூடிய சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மீண்டும் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்தார்.

பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு நீட் விலக்கு சட்டமசோதா மீண்டும் இன்று பகல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதை அறிவித்த சபாநாயகர் அப்பாவு, இந்த சட்ட மசோதா இன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்படும் என்றும் தெரிவித்தார்.

அதன்படி மீண்டும் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமசோதா, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை செயலக அதிகாரிகள் மூலமாக இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்கப்பட்டது.

மதியம் ஒரு மணிக்கு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்டமசோதா, நான்கரை மணி நேரங்களில் ஆளுநர் மாளிகையை சென்றடைந்தது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்றம் ஒரு சட்ட மசோதாவை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பினால், அதை ஏற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியது ஆளுநரின் அரசியல் சட்ட கடமைகளில் தவிர்க்க முடியாதது என அரசியலமைப்பு சட்ட வழக்கறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்தநிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இந்த விவகாரத்தில் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.