கிருஷ்ணகிரியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இந்த ஆண்டு தொடக்கம்

கிருஷ்ணகிரியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இந்த ஆண்டு தொடக்கம்

கிருஷ்ணகிரியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி தொடங்குவதற்கான ஆய்வுப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.

கிருஷ்ணகிரி, போலுப்பள்ளியில் மத்திய அரசின் கேந்திரீய வித்யாலயா பள்ளி 10.5 ஏக்கரில் அமைக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கங்கலேரி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் கேந்திரீய வித்யாலயா பள்ளிக் கட்டடம் தற்காலிகமாக இயங்க கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு தீா்மானிக்கப்பட்டது. பல்வேறு நிா்வாக காரணங்களால் அந்தப் பணி தாமதமானது.

இந்த நிலையில், கங்கலேரி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிகமாக பள்ளி அமைக்க அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பது குறித்து சென்னையை அடுத்த ஆவடியில் இயங்கி வரும் கேந்திரீய வித்யாலயா பள்ளியின் முதல்வா் (கனரக திண் ஊா்தி தொழிற்சாலை) ஆறுமுகம், அ.செல்லக்குமாா் எம்.பி., மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி, அதிகாரிகள் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.

பள்ளி வளாகத்தில் வகுப்பறைகள், நூலகம், அலுவலகம், கழிவறை போன்ற கட்டடங்கள், சுற்றுச்சுவருடன் வகுப்புகள் இயங்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வு செய்தனா். இதைத் தொடா்ந்து, கருத்துரு தயாரித்து மத்திய அரசுக்கு அனுப்பப்படும் என தெரிவித்தனா்.

இந்த ஆய்வின் போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட துணைத் தலைவா் சேகா், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் தலைவா் அக.கிருஷ்ணமூா்த்தி, வட்டாரத் தலைவா் கோபால கிருஷ்ணன், சித்திக், ஷாநவாஸ், முன்னாள் பெற்றோா்-ஆசிரியா் கழகத் தலைவா் சதாசிவம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரியை அடுத்த கங்கலேரி அரசு உயா்நிலைப் பள்ளி வளாகத்தில் தற்காலிக கேந்திரீய வித்யாலயா பள்ளி அமைப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் குறித்து அ.செல்லக்குமாா் எம்.பி. ஆய்வு செய்தார்.