தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் – இன்று வெளியீடு!
தமிழகத்தில் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் – இன்று வெளியீடு!

தமிழகத்தில் மருத்துவ துறையின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பார்க்கலாம்.

தரவரிசை பட்டியல்

தமிழகத்தில் இதுவரை 37 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 2 அரசு பல் மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகிறது. அதில் உள்ள இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15% இடங்கள் ஒதுக்கப்படுகிறது. அத்துடன் மீதமுள்ள 85% இடங்களை மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. இதனை தொடர்ந்து 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை கொரோனா பெருந்தொற்று காரணமாக ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 19ம் தேதி முதல் ஜனவரி 7ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு என்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். இதையடுத்து அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 25,511 மாணவர்களும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,777 மாணவர்களும் விண்ணப்பித்திருந்தனர். எனவே மொத்தமாக 40,288 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் பணிகள் முடிவடைந்துள்ளன. அதனால் மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஜனவரி 27ம் தேதி அன்று மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு வீரர் பிரிவுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதையடுத்து வருகிற ஜனவரி 30ம் தேதி அன்று பொதுக் கலந்தாய்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது பொதுக் கலந்தாய்வு என்பதால் அதிக அளவில் மாணவர்கள் கலந்து கொள்வர்கள். தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த பொதுக் கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக இணைய வழியில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் சில தகவல்களை பெற www.tnmedicalselection.net www.tnhealth.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.