தங்கமணி வீட்டில் ரெய்டு: ஈபிஎஸ் கண்டனம்!

 தங்கமணி வீட்டில் ரெய்டு: ஈபிஎஸ் கண்டனம்!

முன்னாள் அமைச்சர் தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் காலை முதலே லஞ்ச ஒழிப்பு சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு திமுக அரசு செயல்பட்டு, சோதனை நடத்துவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இன்று (டிசம்பர்15)ஓமலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு தங்கமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு இந்த சோதனை நடத்துகிறது. அதிமுகவை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை, அதனால் தான் இதுபோன்ற சோதனைகளை நடத்துகின்றன.

இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக அமைப்புத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் சோதனை நடத்துகின்றனர். அதிமுகவின் செல்வாக்கு வளர்ந்து கொண்டிருப்பதை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்று இரண்டை நிறைவேற்றிவிட்டு, மீதமுள்ளவற்றை நிறைவேற்ற முடியாமல், இதுபோன்ற சோதனைகளை நடத்துகிறது.

நீட் தேர்வு ரத்து, குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 என எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளன. சென்னை மழையின் போது சரியாகத் தூர்வாருதல் நடவடிக்கையை எடுக்காததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். இதை எல்லாம் மறைப்பதற்குத் தான் இந்த ரெய்டு. பழிவாங்கும் நடவடிக்கையோடு செயல்படுகின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.