தமிழ்நாட்டில் 12 பேருக்கு ஒமிக்ரான் முந்தைய அறிகுறி!

 தமிழ்நாட்டில் 12 பேருக்கு ஒமிக்ரான் முந்தைய அறிகுறி!


தமிழ்நாட்டில் மேலும் நான்கு பேருக்கு ஒமிக்ரானின் முந்தைய அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்று சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் மற்ற வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவி வரும் ஒமிக்ரான் பல நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் அதன் பரவல் தொடர்ந்து கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருடன் தொடர்பில் இருந்த குடும்பத்தினர் மற்றும் பயணம் செய்த ஒருவர் என மொத்தம் ஏழு பேருக்கு எஸ்-ஜீன் டிராப் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று காங்கோ நாட்டிலிருந்து வந்த ஆரணியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எஸ்-ஜீன் டிராப் கண்டறியப்பட்டது. இதன்மூலம் எஸ்-ஜீன் டிராப் கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை எட்டு ஆக இருந்தது. தற்போது இது 12 ஆக உயர்ந்துள்ளது.

சென்னை கிங்ஸ் மருத்துவமனையில் செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், “ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருடன் பயணித்த பயணியுடன் தொடர்பில் இருந்த நால்வருக்கு எஸ்-ஜீன் டிராப், அதாவது ஒமிக்ரானின் முந்தைய அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இவர்களின் மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுவரை தமிழ்நாட்டில் 12 பேருக்கு ஒமிக்ரானுக்கு முந்தைய அறிகுறி காணப்பட்டுள்ளது.

ஒமிக்ரான் உறுதி செய்யப்பட்டவர் சென்ற இடங்கள் மற்றும் தொடர்பில் இருந்தவர்கள் என 219 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நேரத்தில் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர் உட்பட 13 பேர் கிங்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களின் 16 வயது சிறுவன் தவிர மற்ற அனைவரும் தடுப்பூசியின் இரண்டு தவணையையும் முழுமையாக செலுத்திக் கொண்டவர்கள். அனைவருக்கும் லேசான பாதிப்பு மட்டுமே உள்ளது” என்று கூறினார்.