மீண்டும் மஞ்சப்பை

மீண்டும் மஞ்சப்பை

பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு இயக்கம் தொடங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கும், மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்தது. இந்த தடை உத்தரவு கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், மக்களிடையே பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்த மாதிரி தெரியவில்லை. மேலும் கொரோனா காரணமாக அரசாங்கத்தாலும் இந்தப் பணிகளை சரிவர கவனிக்க முடியவில்லை.

அதனால் பிளாஸ்டிக் பயன்பாட்டினைக் கட்டுப்படுத்தும் விதமாக, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழில் நிறுவனங்களுக்கு அருகில் குடியிருப்பவர்கள் சட்டவிரோதமாக இயங்கும் தொழிற்சாலைகள் குறித்து தகவல் சொன்னால் வெகுமதி வழங்கப்படும் என்றும் சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

இந்த நிலையில் நேற்று (நவம்பர் 27) தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையில், “உற்பத்தி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்களில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் பங்கு 40 சதவிகிதம் ஆகும். மிக குறைந்த நேரமே பயன்படுத்தப்படும் இவை, சுற்றுச்சூழலில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் தேங்கி விடுகின்றன. பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதன் மூலமும் மாசு ஏற்படுகிறது.

இதன் பயன்பாட்டால் பல்லுயிர்களுக்கு ஏற்படும் இழப்பு மிகப்பெரியது. இறுதியாக கடலுக்கு சென்று கடல்வாழ் உயிரினங்களுக்கும்பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க தமிழ்நாடு அரசு நான்கு திட்டங்களை முன்னெடுத்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான மக்கள் இயக்கத்தை ஆதரிக்க வேண்டும். பிளாஸ்டிக் தடையை திறன்பட கண்காணிக்க திட்டத்தை உருவாக்க வேண்டும் . சுற்றுச் சூழலுக்கு ஏற்ற பொருட்களை தயாரிக்க பொருள்கள் தயாரிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் போன்ற வழிமுறைகளை அரசு தெரிவித்துள்ளது.

அதுபோன்று ‘மீண்டும் மஞ்சப்பை’ என்ற பெயரில் விழிப்புணர்வு இயக்கம் தொடங்க வேண்டும். தமிழ்நாட்டின் கலாச்சாரத்தின் ஒன்றிப்போன மஞ்சப்பையை மக்கள் மீண்டும் பயன்படுத்த ஊக்கவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த மாநில, மாவட்ட அளவிலான பணிக்குழுக்களையும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கவுள்ளது.