தாலிக்கு தங்கம் அமைச்சர் கீதா ஜீவன் புது தகவல்

தாலிக்கு தங்கம் அமைச்சர் கீதா ஜீவன் புது தகவல்


தமிழக அரசின் சமூக நலத்துறை மூலம் வழங்கப்படும் திருமண உதவித்தொகை திட்டமான 'தாலிக்கு தங்கம்' மூலம் பலமடையும் பெண்களின் வீடு மற்றும் திருமண மண்டபம் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழக அரசின் சமூக நலத்துறையின் மூலம் மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அதிலும் 5 முக்கிய திருமண உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக 'தாலிக்கு தங்கம்' வழங்கும் திட்டம் மூலம் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.50,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. மேலும் அதற்கு கீழ் கல்வித்தகுதி உள்ள பெண்களுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 ரொக்கமும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதால் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

முன்னதாக அரசு இது குறித்து ஒன்றை வெளியிட்டது. அதில், தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் நபர்களின் வீட்டில் யாரேனும் அரசு பணியில் இருந்தாலும், அல்லது வேறு ஏதேனும் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன் பெற்றுள்ளாரா என்பதையும் ஆய்வு செய்து அப்படி இருப்பின் அந்த விண்ணப்பத்தினை தள்ளுபடி செய்திட வேண்டும். மணமகளுக்கு 18 வயதும், மணமகனுக்கு 21 வயதும் நிரம்பியிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், விண்ணப்பிக்கும் நபர் மாடி வீடு, நான்கு சக்கர வாகனம் வைத்திருந்தால் மனு தள்ளுபடி செய்திட வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.72,000 க்குள் இருப்பதற்கான வருமான சான்றிதழை அரசு அலுவகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், தற்போது சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அவர்கள் புதிய அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். அதன்படி, தாலிக்கு தங்கம் திட்டத்தில் விண்ணப்பிக்கும் பெண்களின் வீடு மற்றும் திருமண மண்டபம் போன்றவை அரசு அதிகாரிகளால் நேரடியாக ஆய்வு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் விண்ணப்பித்திருந்த அனைவருக்கும் உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்திற்காக இந்த ஆண்டு 728 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.