கர்ப்பிணியை அலைக்கழித்ததால் கூடலூருக்கு மாற்றப்பட்ட பெண் மருத்துவரை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் மனு

கர்ப்பிணியை அலைக்கழித்ததால் கூடலூருக்கு மாற்றப்பட்ட பெண் மருத்துவரை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் மனு

 உடுமலையில் கர்ப்பிணியை அலைக்கழித்ததால் கூடலூருக்கு மாற்றப்பட்ட பெண் மருத்துவரை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி சுகாதாரத்துறைக்கு பொதுமக்கள் மனு அனுப்பி உள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காமல் பணியில் இருந்த பெண் மருத்துவர் ஜோதிமணி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.

மேலும், தான் பகுதி நேரமாக பணிபுரியும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்ததோடு, அங்கு வந்து அந்த சிகிச்சையை அவரே செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சுகாதாரத்துறைக்கு புகார் சென்றதால், அந்த அரசு மருத்துவமனை மருத்துவர் ஜோதிமணி, கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இதற்கு கூடலூர் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். மேலும் அதை ரத்து செய்யக்கோரியும், வேறு எங்காவது அவரை பணியிட மாற்றம் செய்யக்கோரியும் சுகாதாரத்துறைக்கு மனுக்களும் அனுப்பப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கூடலூர் பகுதி மக்கள் கூறுகையில், எங்களுக்கு இன்று வரை போதிய மருத்துவ சிகிச்சை எட்டாக்கனியாகவே உள்ளது. இதனால் அண்டை மாநிலமான கேரளாவுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது. கூடலூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. அதில் மக்களுக்கு சிறந்த சேவையாற்ற கூடிய வகையில் பணியாற்றும் டாக்டர்களை நியமிக்க வேண்டும்.

ஆனால் உடுமலை அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்காமல் அலைக்கழித்த பெண் மருத்துவரை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்து உள்ளனர். இந்த உத்தரவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அவரை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இப்படி எல்லா ஊர் மக்களும் கிளம்பிட்டாங்க ண்ணா ஊழல் ஊதாரித்தனம் மிக்க அதிகாரிகளின் பாடு படு திண்டாட்டம் தான்.