காற்றில் பறக்கும் தேர்தல் அறிக்கைகள்: கேபிள் டிவி கட்டணம் டிசம்பர் 1 முதல் உயர்வு?

காற்றில் பறக்கும் தேர்தல் அறிக்கைகள்: கேபிள் டிவி கட்டணம் டிசம்பர் 1 முதல் உயர்வு?


சேனல் நிறுவனங்கள் பிரதான சேனல்களை, தொகுப்பிலிருந்து வெளியேற்றுவதால், டிச., 1 முதல் கேபிள், 'டிவி' கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக, கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர்.

விரும்பிய சேனல்களுக்கு மாறும் முறை, 2019 பிப்.,யில் அறிமுகமானது. புதிய முறையில், வாடிக்கையாளர்களே தாங்கள் விரும்பும் சேனல்களை, தேர்வு செய்து கொள்ளலாம். இதில், சேனல் நிறுவனங்கள், தங்களின் சேனல்களுக்கான அதிகபட்ச கட்டணத்தை, 19 ரூபாய் வரை நிர்ணயித்து கொள்ள முடியும்.

இந்நிலையில், திருத்தியமைக்கப்பட்ட கட்டணம், ஜனவரியில் வெளியிடப்பட்டது. இதில், ஒரு சேனலின் அதிகபட்ச கட்டணம், 19 ரூபாயிலிருந்து, 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் மேலும் அதிகமான மற்றும் விரும்பிய சேனல்களை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.

இந்த திருத்தப்பட்ட கட்டணத்திற்கு, சேனல் நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதனால், குறிப்பிட்ட சேனல்கள் அடங்கிய தொகுப்பிற்கு, தனி கட்டணம் விதிக்க திட்டமிட்டுள்ளன. உதாரணமாக, 'டிஸ்னி ஹாட் ஸ்டாரில்' தொகுப்பு சேனல்கள்களின் கட்டணம், 49 ரூபாயாக உள்ளது. இது, 69 ரூபாயாக உயர்த்தப்பட உள்ளது.

இதேபோல, ஒவ்வொரு நிறுவனங்களும் தொகுப்பு சேனல்களின் கட்டணத்தை உயர்த்த உள்ளன. இல்லையெனில், பிரதான சேனல்களை தொகுப்பில் இருந்து மாற்ற உள்ளனர். அவ்வாறு மாற்றும்போது, அதற்கான கட்டணம் மாறும். இதனால், மாதக் கேபிள் கட்டணம், 30 முதல் 40 சதவீதம் வரை உயரும் என கேபிள் ஆப்பரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது, அரசு கேபிள் மாதக் கட்டணமாக, 130 ரூபாய் உடன் ஜி.எஸ்.டி., என, 154 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதன் படி பார்த்தால் ஒவ்வொரு மாதமும் 60 ரூபாய்க்கு அதிகமான கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். அதனால் மாதம்தோறும் கேபிள் கட்டணமாக 200 ரூபாய் முதல் 250 வரை வசூலிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது இரு கட்சிகளும் கேபிள் டிவி கட்டணத்தை ரத்து செய்வதாக தங்கள் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது தற்போது கேபிள் கட்டணம் ரத்து க்கு பதிலாக உயர்வு என்கிற செய்தி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

தேர்தல் அறிக்கைகள் அனைத்தும் வெறும் ஓட்டு வங்கிக்காக மட்டும்தானா...? மக்களின் நலனுக்காக இல்லையா என்கிற கேள்வி எழுந்துள்ளது. 

இதற்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் என்ன பதில் சொல்லப் போகிறார்...?