ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வளைகாப்புக்கு சென்ற நிதி மந்திரி

ஜிஎஸ்டி கூட்டத்தை புறக்கணித்துவிட்டு வளைகாப்புக்கு சென்ற நிதி மந்திரி


தாமதமாக அழைப்பு விடுத்ததால் ஜிஎஸ்டி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தமிழக நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் இன்று, 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் அனைத்து மாநில நிதி துறை அமைச்சர்கள் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆனால், தமிழ்நாடு சார்பில் நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்கவில்லை.

மதுரையில்  செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தபோது, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதற்கான காரணத்தை தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி மிகத் தாமதமாக தெரிவிக்கப்பட்டது.
17ம் தேதி அன்று கூட்டம் நடைபெறும் நிலையில், பத்தாம் தேதிக்கு மேல்தான் தகவல் கூறப்பட்டது.

இந்த கூட்டத்தில் என்ன மாதிரி விஷயங்கள் விவாதிக்கப் படவேண்டும் என்ற அஜென்டா அதைவிட தாமதமாக தரப்பட்டது. அதற்குள்ளாக நான் முன்கூட்டியே சில பணிகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. எனவே அதை ரத்து செய்து விட முடியவில்லை. உதாரணத்துக்கு.. இப்போது இங்கே இருந்து (செய்தியாளர் சந்திப்பு இடத்திலிருந்து) நேரா, ஒரு வளைகாப்பு நிகழ்ச்சிக்கு போக இருக்கிறோம். எனவே எல்லாவற்றையும் சேர்த்து வைத்து இந்த முடிவை எடுத்துள்ளோம்.

கடந்த ஒன்றரை வருட காலமாக வீடியோ கான்பரன்ஸ் மூலமாக தான் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. இன்னும் கொரோனா ஓயவில்லையே. மூன்றாவது அலை பாதிப்பு ஏற்படும் என்று எச்சரிக்கை இருக்கிறது. செய்தியாளர்களாகிய நீங்கள் கூட முகத்தில் முக கவசம் அணிந்து வந்திருக்கிறீர்கள். ஆனால் திடீரென்று அனைத்து மாநில நிதியமைச்சர்களும் 100% நேரடியாக வருகை தந்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று 10 நாட்களுக்கு முன்பாக தகவல் தெரிவிப்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இவ்வாறு கூட்டத்தில் பங்கேற்காததற்கான காரணம் தொடர்பாக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

நல்ல நிதியமைச்சர்...!  வாழ்க வளமுடன்...!!