யார் சொல்வது உண்மை....?இல்லாத கொழுந்தியாள் பற்றி செய்தியா.....? கொதித்து போன பிடிஆர்.. !

யார் சொல்வது உண்மை....?இல்லாத  கொழுந்தியாள் பற்றி செய்தியா.....? கொதித்து போன பிடிஆர்.. !


ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன் என்று தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட்டரில் வதந்திகளை பரப்பிய கும்பல்களுக்கு எதிராக கடுமையான ட்வீட்களையும் பிடிஆர் வெளியிட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசு சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அழைப்பு சென்று இருந்த நிலையில், அவர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

எனக்கு கடைசி நேரத்தில்தான் அழைப்பு வந்தது, அதோடு எதை பற்றி கூட்டத்தில் விவாதிக்க போகிறோம் என்பது குறித்த விவரங்களும் கடைசி நேரத்தில்தான் தெரிவிக்கப்பட்டது. இதுவரை ஆன்லைன் வழியாக கூட்டம் நடந்த நிலையில் திடீரென நேரடியாக லக்னோ வர சொல்லி அழைப்பு விடுத்துள்ளனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியவில்லை என்று நிதித் துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்தார்.

கூட்டம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் தெரிவிக்கிறார்கள். நான் ஏற்கனவே நிறைய நிகழ்ச்சிகளுக்கு வருவதாக நேரம் ஒதுக்கிட்டேன். அதனால் என்னால் செல்ல இயலவில்லை என்று அவர் விளக்கம் அளித்து இருந்தார். ஆனால் இந்த செய்தியை இணையத்தில் பலர் தவறாக திரித்து ட்வீட் செய்து வந்தனர். நியூஸ் பிரேக்கிங் புகைப்படங்களை போட்டோஷாப் செய்து பொய்யான தகவல்களை பரப்பி வந்தனர். அதன்படி பிடிஆர் பழனிவேல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடக்கும் நாளில் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு செல்வதற்காக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு செல்லவில்லை என்று வதந்தி பரப்பப்பட்டது.

வதந்தி

அதோடு கொழுந்தியாள் மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு கலந்து கொள்வதற்காக இவர் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்தார் என்றும் வதந்திகள் பரப்பப்பட்டது. இதெல்லாம் போக இன்னொரு நபர் ஒரு படி மேலே போய்.. பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.. லக்னோ செல்ல வேண்டும் என்றால் மூன்று விமானம் மாறி செல்ல வேண்டும். இதை விரும்பாத நிலையில் முதல்வரிடம் அவர் ஸ்பெஷல் விமானம் கேட்டார். ஸ்பெஷல் விமானம் கிடைக்காமல் ஈகோ காரணத்தால் பிடிஆர் இந்த கூட்டத்தை புறக்கணித்தார் என்று வதந்திகள் பரப்பப்பட்டது.

இது போன்ற வதந்திகளை பரப்பிய ட்வீட்டர் ஐடிகளை டேக் செய்தும், ரீ ட்வீட் செய்தும் பிடிஆர் பதிலடி கொடுத்து வருகிறார். கொழுந்தியாள் குறித்த வதந்திக்கு பதில் அளித்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், இது வடிகட்டிய முட்டாள்தனம். கூட்டம் நடந்தது டெல்லியில் இல்லை லக்னோவில். எனக்கு கொழுந்தியாள் இல்லை, எப்படி இல்லாதவர் மகளுக்கு விழா நடக்கும் பொய் சொல்வதற்கு கூட ஒரு குறைந்தபட்ச அறிவு வேண்டாமாடா மாட்டு மூத்திரம் குடித்தே மூளை கெட்டுப் போனவர்களா, என்று கடுமையாக பதில் அளித்துள்ளார்.

ஸ்பெஷல் விமானம் கிடைக்காத காரணத்தால் கூட்டத்தை புறக்கணித்ததாக வெளியான செய்திகளுக்கும் பிடிஆர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், காலாவதியான உங்களை போன்ற நபர்களுக்கு ஒன்று சொல்கிறேன்.. விமான பயணங்கள் இப்போதெல்லாம் மாறிவிட்டது. மதுரையில் இருந்து லக்னோ செல்ல இரண்டு விமானம் போதும். கூகுளில் சர்ச் செய்து பார்த்தாலே தெரியும்.. கூகுள் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இன்னொரு ட்வீட்டில், ஒன்றுக்கொன்று முரண்பாடான 2 பொய்களை சொல்ற முட்டாள்களே நான் கூட்டத்திற்கு செல்லாதது இல்லாத விழாவிற்காகவா? அல்லது நான் எப்போதும் புறக்கணிக்கும் தனிவிமானம் இல்லாததாலா? கூட்டம் டெல்லியிலா லக்னோவிலா? அநாகரீகமாக எனது மனைவியை பற்றி பேசுவதை நிறுத்திக்கொள், மாட்டுச்சாண மூளை கொண்டவரே என்று கடுமையாக கடிந்து கொண்டு இருக்கிறார்.

எனக்கு கொழுந்தியாள் இல்லை. அப்படி இருக்கும் போது இதை எல்லாம் வைத்து சிலர் பொய் செய்து பரப்புகிறார்கள். அதை சிலர் ஷேர் செய்தும் வருகிறார்கள் என்று பிடிஆர் விமர்சனம் செய்துள்ளார். இன்னும் பல ட்வீட்களுக்கு இதேபோல் பிடிஆர் கோபமாக பதில் அளித்துள்ளார். இவரை குறி வைத்து பொய்யான தகவல்களை பரப்பியவர்கள், அதை ஷேர் செய்தவர்களை டேக் செய்து பிடிஆர் நேற்று இந்த பதில்களை அளித்துள்ளார்