பள்ளி திறப்பு: ஆசிரியர்கள் எப்படி அணுக வேண்டும்?

 பள்ளி திறப்பு: ஆசிரியர்கள் எப்படி அணுக வேண்டும்?


ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் ஆசிரியர்களிடம் நேரடியாகக் கற்பதற்காக வகுப்பறைகளுக்குத் திரும்பும் மாணவர்களை, ஆசிரியர்கள் எப்படிக் கையாள வேண்டும்? மாணவர்களிடம் ஆசிரியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை, தவிர்க்க வேண்டியவை குறித்து சேலம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மனநலத் துறை உதவிப் பேராசிரியர் வி.அபிராமி தரும் குறிப்புகள்:

பள்ளி நிர்வாகம் செய்ய வேண்டியவை:

1. கரோனா தொற்று இன்னும் நீங்கிவிடவில்லை. இதைக் கருத்தில் கொண்டு மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். தனிமனித இடைவெளியுடன் மாணவர்களை அமரவைக்க வேண்டும். முகக்கவசம், கிருமிநாசினி போன்றவை வழங்கப்பட வேண்டும்.

2. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் சிறார்களிடம் இதைச் செயல்படுத்துவது கடினம். அந்தப் பணியை பொறுமையுடன் செய்ய வேண்டும்.

3. நீண்ட இடைவெளி காரணமாக பள்ளிச் சூழலே குழந்தைகளுக்குப் புதிதாகத் தோன்றலாம். பள்ளிச் சூழலை அவர்கள் பழக்கப்படுத்திக்கொள்ள போதுமான கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.

4. இணையவழியில் வகுப்பு நடத்தப்பட்டிருந்தாலும் மாணாக்கர்களுக்குக் கற்றலில் தொய்வு ஏற்படக்கூடும். அதைப் புரிந்துகொண்டு நிதானமாகக் கற்பிக்க வேண்டும்.

5. அவர்கள் படிப்பில் சற்று பின்தங்கியிருந்தால் கூடுதல் பாடங்களைத் திணிக்காமல் பொறுமையாகக் கற்றல் திறனை மேம்படுத்த வேண்டும்.

6. காலையிலிருந்து மாலைவரை வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்று வெகு நாட்கள் ஆகிவிட்டதால், தொடர்ச்சியாகப் பாடங்களை கவனிப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதைக் கருத்தில்கொண்டு கற்பிக்க முயல வேண்டும்.

7. சிறார்களைப் பாதுகாப்புடன் விளையாட அனுமதிக்க வேண்டும்.

8. பள்ளிக்குச் சென்று படிக்க வேண்டிய அவசியத்தைப் பெரிய வகுப்பு மாணவர்களுக்கு எடுத்துரைக்க முயலலாம்.

9. இத்தகைய கடினமான சூழலில் பள்ளிகளில் மாணவர்கள் கற்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டு பெற்றோர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

10. பெற்றோர்களின் மனநிலையையும் எதிர்பார்ப்பையும் கருத்தில்கொண்டு குழந்தைகளின் சூழலையும் புரிந்துகொண்டு பள்ளிகள், ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

*தவிர்க்க வேண்டியவை:*

1. மாணவர்களிடம் கண்டிப்புடன் நடந்துகொள்ளக் கூடாது. அந்தக் கண்டிப்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமிடையே இடைவெளியை அதிகப்படுத்திவிடும்.

2. மாணவர்களின் கற்றல் திறனைவிட அதிகமான பாடங்களைத் திணிக்கக் கூடாது.

3. இணையவழிக் கல்வி சுதந்திரமானது, வசதியானது என்கிற எண்ணம் ஏற்பட வாய்ப்புதரக் கூடாது.

4. எக்காரணத்தைக் கொண்டும் மாணவர்களுக்கு தொற்று ஏற்படும் சூழலை உருவாக்கக் கூடாது.

5. பள்ளி நிர்வாகமும் ஆசிரியர்களும் மாணவர்களின் தேவைகளில் இருந்து விலகி நிற்கக் கூடாது.

6. ‘இவ்வளவு நாள் சும்மாதானே இருந்தீர்கள்’, ‘ஜாலியாக இருந்தீர்கள்’ என்றெல்லாம் கடந்த காலத்தைப் பற்றிய சொல்லாடலைத் தவிர்க்க வேண்டும். அனைவருக்குமான ஓர் இறுக்கமான சூழலே இருந்தது.

7. உடல்நலம் சார்ந்த தொந்தரவுகளைப் பற்றி அவர்கள் கூறும்போது, அலட்சியம் செய்யக் கூடாது.

8. எக்காரணத்தைக் கொண்டும் எந்த விஷயத்துக்காகவும் அவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது.

9. பெற்றோர் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்ய வேண்டும் என்பதற்காக இன்றியமையாத விஷயங்களில் சமரசம் செய்துகொள்ளக் கூடாது.

10. பள்ளிக் கல்வியில் இடைவெளி வந்துவிட்டது. அந்த இடைவெளியை விரைவில் நிரப்பியாக வேண்டுமென்று குழந்தைகளின் மேல் அதிக பளுவை ஏற்றக் கூடாது. அவர்கள் பள்ளிக்குப் பாதுகாப்புடன் சென்றுதிரும்புவதையும், தங்களைத் தயார்படுத்திக்கொள்ளவும் போதுமான அவகாசம் வழங்க வேண்டும். ‘இனிமேல் படிப்பு மட்டும்தான். விளையாட்டுக்கு இடமில்லை என்கிறரீதியில் குழந்தைகளை அணுகக் கூடாது’.