வடமாநில இளைஞரின் அறையில் 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 தோட்டாக்கள் பறிமுதல்: தகவல் தெரிவிக்காத ஆய்வாளர் பணியிட மாற்றம்!

 வடமாநில இளைஞரின் அறையில் 2 நாட்டுத் துப்பாக்கிகள், 2 தோட்டாக்கள் பறிமுதல்: தகவல் தெரிவிக்காத ஆய்வாளர் பணியிட மாற்றம்!


கோவை

கோவையில் வடமாநில இளைஞரின் அறையில், 2 நாட்டுத் துப்பாக்கிகளும், 2 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை சுக்ரவார்பேட்டையில், வடமாநில இளைஞர் ஒருவர் துப்பாக்கியுடன் சுற்றுவதாக, வெரைட்டிஹால் காவல் நிலையத்துக்கு நேற்று (செப்.11) தகவல் கிடைத்தது. ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவலர்கள் இது குறித்து விசாரித்தனர்.

துப்பாக்கியுடன் சுற்றியவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பவானி (27) என விசாரணையில் தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் கோவைக்கு வந்த பவானி, வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வைத்துள்ள பிளைவுட் நிறுவனங்களில் வேலை செய்து வந்துள்ளார். 2 மாதத்துக்கு முன்னர் ராஜஸ்தானுக்குச் சென்று விட்டு, கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கோவைக்கு திரும்பியுள்ளார்.

முன்னரே, வேலை செய்த இடத்தில் வேலை வழங்காததால், வேறு இடத்தில் வேலை தேடி வந்துள்ளார். அப்போது அவரது பையில் துப்பாக்கி வைத்திருப்பதைப் பார்த்து யாரோ ஒருவர், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தது தெரியவந்தது.

இதையடுத்து காவல்துறையினர், பவானி தங்கியிருந்த அறைக்கு விசாரிக்கச் சென்றனர். அவர் இல்லாததால், பூட்டப்பட்டிருந்த அவரது அறையை உடைத்து சோதனை நடத்தினர். அதில், வீட்டில் ஒரு பையில் 30 செ.மீ. நீளம் உள்ள நாட்டுத் துப்பாக்கி இருந்தது. காவல்துறையினர் வருவதை அறிந்த அவர், துப்பாக்கியை வைத்துவிட்டு எங்கோ சென்றது தெரியவந்தது.

இச்சம்பவம் தொடர்பாக வெரைட்டிஹால் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

பவானி தங்கியிருந்த அதே அறையில் இன்றும் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கு 11 செ.மீ. நீளம் உள்ள நாட்டுத் துப்பாக்கியும் 2 தோட்டாக்களும் இருந்தன. அதை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

ஆய்வாளர் மாற்றம்

நேற்று துப்பாக்கி கைப்பற்றப்பட்ட தகவலை, துறை சார்ந்த உதவி ஆணையர், துணை ஆணையர், ஆணையர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு, வெரைட்டிஹால் ரோடு காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தெரிவிக்கவில்லை. இதையடுத்து நேற்று இரவு ஆய்வாளர் செந்தில்குமாரை மாநகரக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணியிடம் மாற்றி, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் உத்தரவிட்டார். இந்த உத்தரவு வயர்லெஸ் மூலம் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.