குடிநீர் கேட்டு திருநெல்வேலியில் இரண்டு இடங்களில் சாலை மறியல்

குடிநீர் கேட்டு திருநெல்வேலியில் இரண்டு இடங்களில் சாலை மறியல்


குடிநீர் வழங்கிட கேட்டு, திருநெல்வேலி மாவட்டத்தில், இன்று ஒரே நாளில், இரண்டு இடங்களில், காலி குடங்களுடன், பெண்கள் சாலை மறியல்!  திருநெல்வேலி,ஆக.30:- :"கடந்த இரு வாரங்களுக்கும் மேலாக, தங்களுடைய பகுதிகளில், உள்ளாட்சி அமைப்பின் சார்பிலான, பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகம், முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, குடிநீர் பெறுவதற்காக, ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு பயணித்து, அதனை தங்களுடைய வீடுகளுக்கு கொண்டுவர வேண்டியதுள்ளது. இதனால் கடுமையான உடற்சோர்வும், அதிகமான காலவிரையமும் ஏற்படுகின்றன. சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால், தாங்கள் நாள்தோறும் மிகுந்த சிரமங்களை, சந்திக்க வேண்டியதுள்ளது. எனவே, உடனடியாக தங்களுக்கு, முறையான குடிநீர், தங்கு தடையின்றி கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்!" என்பதை வலியுறுத்தி, திருநெல்வேலி மாநகராட்சி உட்பட்ட, கொக்கிரகுளம் பகுதியிலும், கூடங்குளம்  ஊராட்சிக்கு உட்பட்ட, "இடிந்தகரை" மீனவ கிராமத்திலும், காலி குடங்களுடன், இன்று (ஆகஸ்ட்.30)  ஏராளமான பெண்கள்,  "சாலை மறியல்" போராட்டத்தில், ஈடுபட்டனர். இதனால் அந்தந்த இடங்களில், போக்குவரத்தில், தொய்வு ஏற்பட்டது. காவல்துறை மற்றும் உள்ளாட்சித்துறை உயர் அலுவலர்கள், சம்பவ இடங்களுக்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சீரான குடிநீர் கிடைத்திட, உடனடி நடவடிக்கை எடுப்பதாக, உறுதி அளித்தனர்.அதனை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர்.