திருச்சியில் தடுமாறும் கே. என். நேரு....?!
திமுக வெற்றி பெற்றால் அமைச்சராவது நிச்சயம் என்ற பட்டியலில் இடம்பெற்றவர் திமுக முதன்மை செயலாளரும் திருச்சி மேற்கு வேட்பாளருமான கே.என்.நேரு. அதனாலேயே திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி, நட்சத்திர வேட்பாளர் போட்டியிடும் தொகுதியாக பார்க்கப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு வரை திருச்சி இரண்டாவது சட்டமன்ற தொகுதி என்று அழைக்கப்பட்டு வந்தது. தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி என்று அழைக்கப்பட்டு வருகிறது. இத்தொகுதியில் 1957 முதல் 7 முறை தி.மு.க.வும், 6 முறை அ.தி.மு.க.வும், 2 முறை கம்யூனிஸ்ட்கட்சியும் கைப்பற்றி இருந்தன.
கடந்த 25 வருடங்களாக திருச்சி திமுகவில் அசைக்க முடியாத சக்தியாக வலம் வரும் நேரு, 1989 தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரானார். மின்சாரத் துறை, பால்வளம், செய்தித் துறை, தொழிலாளர் நலத்துறைகளைக் கவனித்தவர், 1996 தேர்தலில் வெற்றி பெற்று உணவு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சரானார். 2006-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று போக்குவரத்துத்துறை அமைச்சரானார். 2011-ல் நடந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தவர், 2016-ல் நடந்த தேர்தலில் 92,049 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளர் ஆர்.மனோகரன் 63,634 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.
இந்த முறை கே.என். நேருவை எதிர்த்து அதிமுக சார்பில் வி. பத்மநாதன், நாம்தமிழர் கட்சி சார்பில் வினோத், அமமுக கூட்டணியில் எஸ்.டி.பி.ஐ சார்பில் ஆர். அப்துல்லா ஹஸ்ஸான், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் அபுபக்கர் சித்திக் உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். வழக்கமாக அதிமுக வேட்பாளர்தான் நேருவுக்கு கடும் போட்டியாளராக இருப்பார். ஆனால், இந்த முறை அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட வி. பத்மநாதன் புதுமுகம் என்பதால், நேருவுக்கு சாதகமாக பார்க்கப்பட்டது.
இருந்தாலும் தேர்தலில் பணம் கொடுக்கும் விவகாரத்தில் தொண்டர்களுடன் பேசும்போது இவர் பேசிய ஒரு ஆபாச பேச்சுதொகுதி மக்களிடையே மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமைச்சர் இவ்வளவு அசிங்கமான வர என்கிற அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதனால் இவரது வெற்றியும் பாதிக்கின்றது.