பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்!

பள்ளி மாணவர்களுக்கு அடுத்து வரும் குட் நியூஸ்!

பாடத் திட்டம் குறைப்பு குறித்து முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் அறிக்கை வழங்கப்பட உள்ளது.


கொரோனா பரவல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்படவில்லை. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நவம்பர் 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்புகள் கிளம்பியதால் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. திமுக தலைவர் மு .க. ஸ்டாலின்  மற்றும் அவரின் சகாக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறக்கப்படவில்லை.  அதன்பின்னர் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்த ஆலோசனைகள் நடைபெற்றுவருகின்றன. எட்டு மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் ஆன்லைன் மூலமாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. குறைவான நேரங்களில் அனைத்துப் பாடங்களையும் கற்பிக்க முடியாத சூழல் உள்ளது.

மாணவர்களால் இந்த புதிய முறையால் இலகுவாக பாடங்களை கற்பதில் சிக்கல் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாட திட்டத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்நிலையில் தற்போது பாடத் திட்டங்களை குறைப்பது தொடர்பான விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோபிச் செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பாடத் திட்டத்தை குறைப்பது தொடர்பாக விரிவான அறிக்கையை நவம்பர் 30ஆம் தேதி முதலமைச்சரிடம் வழங்க உள்ளோம். ஐந்து நாள்களில் பாடங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும். அரையாண்டு தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என்ற தகவல் தவறானது” எனக் கூறியுள்ளார்.
அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு, பாடத் திட்டம் குறைப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது