கொரோனா எப்போது அழியும்...? ஜோதிடத்தில் ஆர்வம் காட்டும் மக்கள்...!

 கொரோனா எப்போது அழியும்...? ஜோதிடத்தில் ஆர்வம் காட்டும் மக்கள்...!



கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதன் தாக்கத்தில் இருந்து தப்பிக்க முடியுமா என்பதை அறிய பலரும் ஜோதிடத்தை நாடத் தொடங்கியுள்ளனர். 2020-ம் ஆண்டு மகிழ்ச்சிகரமான ஆண்டாக அமையும் என ஏற்கனவே தொலைக்காட்சிகளில் கூறிய பல ஜோதிடர்கள் இப்போது கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகியுள்ள நிலையில் ஒரு தரப்பினர் இன்னும் ஜோதிடம் மீது அதீத நம்பிக்கை வைத்துள்ளார்கள். முன்பெல்லாம் வெளிநாட்டிற்கு செல்வேனா, தொழில் அமையுமா எனக் கேட்ட பலர் இப்போது, கொரோனா எப்போது அழியும், கொரோனா பாதிப்பு எனக்கு ஏற்படுமா என்பன போன்ற கேள்விகளை தான் கேட்கிறார்கள்.


தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அது குறித்த கவலையில் ஆழ்ந்துள்ளனர் மக்கள். இந்த பாதிப்பில் இருந்து எப்போது மீள்வோம், கொரோனா தாக்காமல் எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்பதை பற்றியே நாட்டில் பெரும்பாலானோர் சிந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் ஜோதிடம் பொய் என மீண்டும் நிரூபணமாகியுள்ளது என ஒரு தரப்பினர் கூறி வந்தாலும் அதனை நம்பி இன்னும் அதன் மீது ஆர்வம் கொண்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.


இந்நிலையில் கொரோனா எப்போது முடுவுக்கு வரும் என்கிற கேள்விக்கு அது கடவுளுக்கு தான் தொியும் என்று நமது தமிழக முதல்வா் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளது பெரும் சா்சசையை கிளப்பியுள்ளது. அவா் சொன்னது ஒரு நம்பிக்கை  என்று சொன்னால்  கூட அதை நம்பாத ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்கிறது.


லாக்டவுன் ரணகளத்துக்கு மத்தியிலும் காணொலி மூலமும், தொலைபேசி மூலமும் விவரங்களை சொல்லி ஜோதிடம் பார்க்கும் பணிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. அவ்வாறு ஜோதிடம் பார்ப்பவர்களின் முதல் கேள்வி, கொரோனா எப்போது அழியும், அது தன்னையும் தனது குடும்பத்தில் யாரையாவது தாக்குமா என்பதாக தான் உள்ளது. ஜோதிடர்கள் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்து வழக்கம் போல் சாதகமாக சாதகம் சொல்லி நம்பிக்கை வார்த்தைகளை உதிர்த்து வருகிறார்கள்.


2020-ம் ஆண்டு மகிழ்ச்சி பொங்கக் கூடிய ஆண்டாக அமையும், சிறப்பான ஆண்டாக அமையும் என கடந்த ஜனவரி மாதம் யூடியூப் சேனல்களுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் ஜோதிடர்கள் அளித்த பேட்டிகளையும், கிளிப்பிங்ஸ்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், கேலி, கிண்டல்களும் செய்யப்படுகின்றன. கடந்த மாதம் கூட குஜராத்தை சேர்ந்த பிரபல ஜோதிட நிபுணர் ஒருவர், மே 21-ம் தேதியோடு கொரோனா இந்தியாவை விட்டு ஓடிவிடும் எனக் கூறியிருந்தார்.


ஜோதிடர்களின் கணிப்புகள் பலித்தாலும் பலிக்காவிட்டாலும் இன்னும் ஜோதிடம் மீது அதீத நம்பிக்கையும், தீராத பக்தியும் கொண்டவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். கிளி ஜோசியம், கைரேகை, ஜாதகம் உள்ளிட்டவைகள் மீதுள்ள அளவுகடந்த நம்பிக்கையின் ஒரு சிறு பகுதியையாவது அறிவியல் மீது வைக்க வேண்டும். இதனிடையே ஜோதிடத்துக்கு பெயர் பெற்ற கேரளாவில் கொரோனா தேவி சிலை அமைத்து ஒருவர் பூஜை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.