முதல்வர் விழாவுக்கு பஸ்களை அனுப்புமாறு தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு : கொதிப்பில் பள்ளி நிர்வாகிகள்...!
திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவுக்கு, பயனாளிகளை அழைத்துச் செல்ல, தனியார் பள்ளிகளிலிருந்து பஸ்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதால், புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை, நேதாஜி மைதானத்தில் அரசு துறைகளின் கீழ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வரும் 23ம் தேதி நடக்கிறது. இதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுவதால், பயனாளிகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலிருந்தும் விழா நடைபெறும் இடத்துக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
உடுமலை விழாவுக்காக, மாவட்டத்தில் செயல்படும் தனியார் பள்ளிகளிலிருந்து மாணவர்களை அழைத்து செல்ல பயன்படுத்தும் வாகனங்களை அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இதுதொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்ற பள்ளி நிர்வாகிகள் தரப்பிலிருந்து, பள்ளி வாரியாக பயன்பாட்டில் உள்ள வாகனங்கள் விபரம் பெறப்பட்டது. அந்த விபரங்களின் அடிப்படையில் உரிய பகுதி வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பொறுப்பில், உடுமலை விழாவுக்கு பயனாளிகள் மற்றும் கட்சியினரை அழைத்துச் செல்ல வாகனங்களை ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயர் வெளியிட விரும்பாத பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அந்தந்த பகுதி ஆர்.டி.ஓ., வாயிலாக அனைத்து பள்ளிகளுக்கும், அந்த பள்ளிகள் அனுப்ப வேண்டிய வாகனங்களின் பதிவெண் குறிப்பிட்டு அவற்றை அனுப்பி வைக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதற்காக, 23ம் தேதி காலையிலேயே வாகனங்களை டீசல் நிரப்பி, டிரைவர் மற்றும் உதவியாளருடன் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்துக்கு கட்சி நிர்வாகிகள் பொறுப்பில் வாகனத்தை கொண்டு சென்று நிறுத்த வேண்டும்.
மீண்டும் விழா முடிந்து அவர்களை அதே இடத்தில் திரும்ப கொண்டு வந்து விட வேண்டும். பள்ளி வேலை நாளில், ஐந்து பஸ், பத்து பஸ் என்று அனுப்பி விட்டால், அந்த நாளில் மாணவர்களை எப்படி அழைத்துச் செல்வது? இதனால் பல தரப்பினரும் பெரும் அவதிக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கல்வித்துறை தரப்பில் கேட்டதற்கு, 'உடுமலையில் விழா நடக்கும் நாளில் பள்ளி மாணவர்களை அழைத்து வர உரிய மாற்று ஏற்பாடு செய்து கொள்ளவும், பள்ளிக்கு விடுமுறை விடாமலும் இதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'அதிகளவிலான வாகனங்கள் உள்ள பள்ளிகளில் மட்டும் இரண்டொரு பஸ்கள் அனுப்புமாறு அறிவுறுத்தி உள்ளோம்' என்றனர்.
தமிழக அரசின் சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகின்ற பெற்றோர்களை கொண்டாடுவோம் மற்றும் புத்தக கண்காட்சி என்று எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் தனியார் பள்ளி வாகனங்களில் மாணவர்களை இலவசமாக அழைத்துச் செல்வது நாள்தோறும் வாடிக்கையாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் அரசு விழாக்களுக்கு கட்சிக்காரர்களை அழைத்துச் செல்வது என்பது மிக மிக கேவலமான செயலாகும்.
திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து தனியார் பள்ளிகளுக்கு என்று இதுவரை எதுவும் செய்தது கிடையாது. வழக்கமாக வழங்குகின்ற உரிமைகளையும் பறித்துக் கொண்டு தனியார் பள்ளிகளை பழிவாங்கும் நோக்கோடு நடந்து வருவது வேதனைக்குரிய செயலாகும்.
அரசின் பாரத்தை நாங்கள் எவ்வளவோ சுமந்து வருகிறோம். தமிழக அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுத்தி கொடுக்கிறோம் எங்களை இப்படி எல்லாம் நசுக்க கூடாது என்று வேதனைப்படுகின்ற பள்ளி நிர்வாகிகளுக்கு இந்த அரசு இன்னும் என்ன செய்யப் போகிறதோ தெரியவில்லை..?