இளையராஜாவின் பாடல்: பிரதமர் மோடி கொடுத்த ரியாக்‌ஷன்...!

இளையராஜாவின் பாடல்: பிரதமர் மோடி கொடுத்த ரியாக்‌ஷன்...!


கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவில் இளையராஜாவின் இசைக் கச்சேரி நடைபெற்றது. இந்த இசைக் கச்சேரியின் போது இளையராஜாவின் ஓம் சிவோஹம் பாடல் பாடி முடிந்த போது, பிரதமர் மோடி எழுந்து நின்று கைகளைத் தட்டி பாராட்டி இருக்கிறார்.

தமிழ்நாட்டிற்கு 2 நாள் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி வந்தார்.  தூத்துக்குடி வந்த பிரதமர் மோடி, புதிய விமான நிலைய முனையத்தை திறந்து வைத்துப் பார்வையிட்டார். பின்னர்  தூத்துக்குடியில் இருந்து திருச்சி வந்த பிரதமர் மோடி,  ஹெலிகாப்டர் மூலமாக அரியலூர் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார்.

அங்கிருந்து சாலை வழியாக மக்களைச் சந்தித்தவாறு வந்த மோடி, பின்னர் கோயிலுக்குச் சென்றார். பெருவுடையார் கோயிலின் வாசலில் பிரதமருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கோயிலுக்குள் இருக்கும் சந்நிதிகளில் சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து கங்கையில் இருந்து கொண்டு வந்த புனித நீரை அபிஷேகத்திற்கு வழங்கிய பிரதமர், சில நிமிடங்கள் தியானம் மேற்கொண்டார்.

தொடர்ந்து மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரி நடத்தப்பட்டது. இளையராஜா இசையில் உருவாகிய ஓம் சிவோஹம் பாடலை பாடினார். சுமார் 4 நிமிடங்கள் இந்த பாடலை இளையராஜாவும், அவரது குழுவினரும் பாடியது அங்கிருந்த அனைவரையும் பக்தி பரவசத்திற்கு அழைத்துச் சென்றது.

இதனை கைகளைக் கட்டி ரசித்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் எழுந்து நின்று பாராட்டினார். அதன்பின் நமச்சிவாய வாழ்க.. நாதன் தாள் வாழ்க.. என்று இளையராஜா பாட, அதனைப் பிரதமர் நரேந்திரமோடி உற்சாகமாக ரசித்தார். இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அங்கிருந்த பக்தர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்றது. அதேபோல் சிவபுராணப் பாடலுக்கு இளையராஜா விளக்கத்தையும் கொடுத்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வந்ததால் இந்தியில் பேசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, முழுமையாக இளையராஜா தமிழ்ப் பாடல்களையும், தமிழிலும் பேசியது மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது. இறுதியாக நரேந்திர மோடிக்கு இளையராஜா நன்றி தெரிவித்தார். இளையராஜாவின் இசைக் கச்சேரிக்கு மோடி எழுந்து நின்று பாராட்டியது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.