எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை
கடந்த சில நாட்களாக தமிழக ஊடகங்களில் ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் என்ன ஏமாளியா..? என்று எடப்பாடி பழனிசாமி பேசியது வைத்துக்கொண்டு தொடர் விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த ஊடகவியலாளர்களின் நோக்கம் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த பேச்சை வைத்துக் கொண்டு அதிமுக பிஜேபி கூட்டணியை உடைக்க முடியுமா என்கிற வகையில் தான் இருக்கிறதே தவிர இதில் வேறொன்றுமில்லை என்று விவரம் அறிந்த அரசியல் நோக்கங்கள் கூறுகின்றனர்.
தமிழக மக்களை குழப்புவதை நோக்கமாகக் கொண்டு செயல்படும் மீடியாக்களின் பொய் பித்தலாட்டங்களை தோல் உரித்து காட்டுவதாகவே ஈபிஎஸ் இன் பேச்சும் அதற்கு நைனார் நாகேந்திரன் கொடுத்த பதிலும் அமைந்துள்ளது. அதை விளக்கமாக கீழே காணுங்கள்....
மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தொகுதியில் தனது பிரசாரத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டார்.
திருத்துறைப்பூண்டியில் பிரசார பஸ்சில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி பேசியதாது:-
எப்போது பார்த்தாலும் கூட்டணி, கூட்டணி என்று கூட்டணியை மட்டுமே நம்பி இருக்கும் ஸ்டாலின் அவர்களே... இங்கே எழுச்சி பெற்று கடல்போல் மக்கள் காட்சி அளிக்கிறார்கள். மக்கள் முகத்தில் மகிழ்ச்சி. இதுவே வெற்றிக்கு அறிகுறி. எடப்பாடி பழனிசாமி அவரது உறவினர் வீட்டில் ரெய்டு நடந்ததால் தான் பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து இருப்பதாக அமைச்சர் ஒருவர் பேசியிருக்கிறார். கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி இதை எத்தனை முறைதான் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள். அப்படியே சொன்னாலும் பொய்யை பொருந்த சொல்ல வேண்டும். என் சம்பந்தி வீட்டில் ரெய்டு நடக்கவில்லை.
இப்படியெல்லாம் பேசி, நான் ஸ்டாலின் பற்றி பேசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக மடைமாற்றும் விதமாக அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். நேரு அவர்களே... சட்டசபை நடந்து கொண்டிருக்கும்போது பாதியில் எழுந்து சென்றீர்கள். உங்கள் குடும்பத்தில் வருமானவரித்துறை ரெய்டு நடந்தது. உங்கள் தம்பி வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு. உங்கள் மகன் வீட்டில் வருமானவரித்துறை ரெய்டு, அமலாக்கத்துறை ரெய்டு நடந்ததா? இல்லையா?
இவ்வளவு அழுக்கை வைத்து கொண்டு எங்களை விமர்சனம் செய்ய என்ன அருகதை இருக்கிறது?. என்ன யோக்கியதை இருக்கிறது?. நேரு அவர்களே... நீங்கள் யார் சொல்லி பேசுகின்றீர்கள் என்பது தெரியும். எத்தனை முறை பேசினாலும் பொய், பொய் தான். பொய்யை பொய்யாக தான் பேசுகின்றார்கள்.
நீங்கள் நடக்காத ரெய்டை நடந்தது மாதிரி பேசி மக்களை மடைமாற்றம் செய்வதை விட்டு விடுங்கள். நீங்கள் முதலில் தப்பிக்க பாருங்கள். நீங்கள் கொள்ளையடித்த பணத்தை மறைத்து வைத்ததால் தான் அமலாக்கத்துறை உங்கள் வீட்டு கதவை தட்டி, தட்டி உங்கள் தூக்கத்தை கெடுத்துக்கொண்டு இருக்கிறது.
நான் சொந்த காலில் நின்று உழைத்து கட்சி தொண்டர்கள் ஆதரவு பெற்று இந்த நிலைக்கு வந்து இருக்கிறேன். அப்படியென்றால் எந்த அளவுக்கு உழைத்து இருப்பேன் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். யாருடைய சிபாரிசு மூலமும் வரவில்லை. உங்களைப்போல் தந்தையின் அடையாளத்தை வைத்து முதல்-அமைச்சர் ஆகவில்லை. கட்சி தலைவர் ஆகவில்லை.
யாருடன் வேண்டுமானாலும் நாங்கள் (அதிமுக) கூட்டணி வைப்போம்; அது எங்கள் விருப்பம். அதிமுக-பாஜக கூட்டணியை பார்த்து முதல்-அமைச்சருக்கு பயம் வந்துவிட்டது. பாஜகவுக்கு ஆட்சியில் பங்கு கொடுப்பார்களா? என்று எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். ஸ்டாலின் அவர்களே... நாங்கள் ஒன்றும் எமாளி அல்ல... அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு (அதிமுக) கூட்டணி வேண்டுமென்றால் வேண்டும், இல்லை என்றால் இல்லை. எதைப்பத்தியும் கவலையில்லை.
உங்களைப்போல (ஸ்டாலின்), வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை, மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுகவை அகற்ற வேண்டும் என்ற கொள்கையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் இணையணும். அதுதான் எங்கள் நிலைப்பாடு. திமுகவை அகற்றவேண்டும் என்று பாஜகவும் கருதுகிறது. அதே நிலைப்பாடோடு தான் பாஜக எங்களுடன் கூட்டணி வைத்துள்ளது.
இன்னும் சில கட்சிகள் எங்களுடன் இணையவுள்ளன. சரியான நேரத்தில் வரும்; அப்போது உங்களுக்கு (திமுக) மரண அடி கொடுப்போம். 200 தொகுதிகளில் வெற்றிப் பெறுவதுதான் கனவு, ஆனால் நிஜத்தில் 210 தொகுதிகளில் வெற்றிப் பெறுவோம். எங்க கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; அதிமுக தான் ஆட்சி அமைக்கும். இதை மடைமாற்றம் செய்து மக்களை குழப்பி ஆட்சிக்கு வரணும்னு நினைக்கிறார் ஸ்டாலின். பொய் பேசுவதில் ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும்; வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. உங்களைப் போல (ஸ்டாலின்), வாரிசுக்காக ஆட்சிக்கு வர நினைக்கவில்லை; மக்கள் விருப்பத்திற்காக மட்டுமே ஆட்சிக்கு வர நினைக்கிறோம். திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரணியில் திரள வேண்டும்," என்று பேசினார்.
பாஜக தலைவர்கள் சிலர் கூட்டணி ஆட்சி என்று பேசி வரும் நிலையில், அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இதனால், அதிமுக - பாஜக கூட்டணியில் கருத்து வேறுபாடு அதிகரிக்கிறதா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்த நிலையில், இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.
நயினார் நாகேந்திரன் பேசியதாவது: "எடப்பாடி பழனிசாமியின் பேச்சில் எந்த உள்நோக்கமும் இல்லை. 'நீங்கள் கட்சியை அடகு வைத்துவிட்டுப் போய்விடுவீர்கள்' என்று திமுகவினர் கேட்கிறார்கள். 'அதிமுகவை பாஜக கபளீகரம் செய்துவிடும்' என்று பேசியதற்கு அவர் (எடப்பாடி பழனிசாமி) பதில் அளித்துள்ளார். இதில் உள்அர்த்தம் எதுவும் கிடையாது. நான் காலையிலேயே எடப்பாடி பழனிசாமியிடம் பேசினேன். எங்களின் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும்," என்றார்.