ஓசூர்-ல் 20,000 பேருக்கு வேலை ரெடி.. டாடா தலைவர் என்.சந்திரசேகரன்

 ஓசூர்-ல் 20,000 பேருக்கு வேலை ரெடி.. டாடா தலைவர் என்.சந்திரசேகரன்

ஓசூர்: டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் உள்ள தங்களுடைய ஐபோன் உற்பத்தி ஆலையில் கூடுதலாக 20,000 பேரை பணிக்கு அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஓசூரில் ஆலையை நிறுவி அங்கே ஐபோன்களின் பாகங்களை இறக்குமதி செய்து அவற்றை ஃபோனாக ஒருங்கிணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இங்கே தற்போது சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்

இந்த ஆலையில் கூடுதலாக 20000 பேரை பணிக்கு அமர்த்தி மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையை 40,000 என உயர்த்த இருப்பதாக டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவரான என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சிப்காட் பகுதியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்துகொண்டு இந்த ஆலைக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவரான என் சந்திரசேகரனும் கலந்து கொண்டார்.

இதன்படி டாடா மோட்டார்ஸ் ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தோடு இணைந்து பனப்பாக்கம் பகுதியில் 9000 கோடி ரூபாய் முதலீட்டில் கார் உற்பத்தி ஆலையை அமைக்கிறது. இதன் மூலம் அங்கே ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக இருக்கின்றன. தற்போதைய சூழலில் டாடா குழுமத்திற்கு சொந்தமான டிசிஎஸ், டைட்டன், டாடா பவர் உள்ளிட்ட நிறுவனங்களில் மட்டும் தமிழ்நாட்டில் நேரடியாகவே 1.50 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் ஓசூர் , கிருஷ்ணகிரி ஆகிய இடங்களில் நவீன மின்னணு ஆலையை நிறுவி இருப்பதாக தெரிவித்திருக்கும் என். சந்திரசேகரன், தற்போது இங்கே 20 ஆயிரம் பேர் வேலையில் இருக்கின்றனர் அவர்களில் 15,000 பேர் பெண்கள் என கூறியுள்ளார். விரைவில் இந்த எண்ணிக்கையை 40,000 ஆக உயர்த்த இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

டாடா மோட்டார்ஸ் உயர் மதிப்பு கொண்ட அதிநவீன வாகனங்களை உற்பத்தி செய்யும் ஆலையாக பனப்பாக்கம் ஆலை அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். முதன்முறையாக இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் மற்றும் ஜாகுவார் நிறுவனங்கள் இணைந்து இந்த ஆலையை அமைக்கின்றன. இதனால் 5000 வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

டாடா குழுமம் தமிழ்நாட்டில் தங்களுடைய டாடா பவர், டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் வாயிலாக கணிசமான தொகையை முதலீடு செய்து ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் தமிழ்நாடு இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக மட்டும் 2200 கோடியை டாடா நிறுவனம் செலவு செய்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.