ஒடிபி’யை தெரிவிக்க பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள்....! டிமிக்கி கொடுக்கும் பெற்றோர்கள்...!!

ஒடிபி’யை  தெரிவிக்க பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வேண்டுகோள்....! டிமிக்கி கொடுக்கும் பெற்றோர்கள்...!!

அரசின் நலத்திட்டங்களைத் தெரிவிக்கவே தொலைபேசி எண் சரிபார்க்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ஒடிபி எண்ணை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைத்தளத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் முழு விவரங்கள் பராமரிக்கப்படுகின்றன. மேலும், கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் செயல்பாடுகளும்எமிஸ் தளம்வழியாக கண்காணிக்கப்படுகிறது. இதற்கிடையே அரசின் நலத்திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை பெற்றோர்களுக்கு பகிர்வதற்காக வாட்ஸ்-அப் வழியாக புதிய தளத்தை உருவாக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இதற்காக எமிஸ் தளத்தில் உள்ள 1.12 கோடி மாணவர்களின் பெற்றோர் செல்போன் எண்கள்ஆசிரியர்கள்மூலம் தற்போது சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இந்த பணிகளை பள்ளி திறப்பதற்கு முன்னர் முடித்துவிடவேண்டுமென கல்வித் துறை தீவிரமாக முயற்சித்து வருகிறது. அதேநேரம் தொடர்பு எண் சரிபார்க்கும் போது ‘ஒடிபி’ எனும் ஒரு முறை கடவுச்சொல் எண் பெற்றோர்களின் செல்போன் எண்ணுக்கு வரும். ஆனால், பாதுகாப்பு கருதி செல்போனுக்கு வரும் ‘ஒடிபி’எண்ணை கொடுக்க பெற்றோர்கள் பலர் தயங்குவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசின் நலத் திட்டங்களை தெரிவிப்பதற்காகவே தொலைபேசி எண்கள் சரிபார்க்கப்படுகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ‘ஒடிபி’எண்ணை பெற்றோர்கள் தெரிவிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் குமரகுருபரன், துறை இயக்குநர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘எமிஸ் தளத்தில் உள்ள பெற்றோர்களின் செல்போன் எண்கள் சரிபார்ப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதுவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் தொடர்பு எண்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் மாணவர்களுக்கு சீருடைகள், பாடப்புத்தகங்கள் உட்பட பொருட்கள் வழங்கப்பட வேண்டும்.

இதையடுத்து எஞ்சியுள்ள தொலைபேசி எண்களின் சரிபார்ப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் பெற்றோர்களின் அச்சத்தை தவிர்க்கும் விதமாக அவர்களை தொடர்பு கொண்டு ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க வேண்டும். மாணவர்களின் நலனுக்காக எடுக்கப்படும் இந்த முயற்சிக்கு பெற்றோர்களும் ஆதரவளிக்க வேண்டும்’, என்று அதில் கூறப்பட்டுள்ளது.

அரசு இவ்வளவு விளக்கம் அளித்தாலும் ஆசிரியர்கள் தொடர்ந்து பெற்றோர்களிடம் வலியுறுத்தினாலும் அவர்களிடமிருந்து OTP No. பெறுவது  என்பது குதிரை கொம்பாகவே இருக்கிறது.  

நம்பிக்கைக்குறிய ஆசிரியர்கள் பேசும்போது  சிலர் தாமாகவே தெரிவித்து விடுகிறார்கள்.  ஆனால் பலரிடம் வடிவேலு கணக்காக பேச வேண்டியுள்ளது.

 பள்ளிக்கல்வித்துறை இந்த விஷயத்தில் அவசரம் காட்டுவது  பலரை சங்கடத்தில்    ஆழ்த்தி உள்ளது .  பள்ளி திறந்தபின் மாணவர்கள் பள்ளிக்கு வந்த பின் இந்த பணிகளை மேற்கொண்டு இருந்தால் இதில் இவ்வளவு சுக்கம் ஏற்பட்டிருக்காது. மாணவர்களை அருகில் வைத்துக்கொண்டு உடனுக்குடன் இந்த பணிகளை முடித்து இருக்கலாம். இவ்வளவு சிரமப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இருக்காது.  இனியாவது பள்ளி கல்வித்துறை சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஆசிரியர்களும் பெற்றோர்களும் வேண்டுகோள் விடுகின்றனர்.

 பல தனியார் பள்ளிகள் இந்த விஷயத்தை இன்னும் கையில் எடுக்கவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  காரணம் இதில் அவர்களுக்கு 1008 சிக்கல்கள்  உள்ளது.  

பிறந்த தேதி மற்றும்  ஆதார் எண்ணை வைத்துக்கொண்டு   EMIS நம்பரை திருடி  கொண்டவர்களிடம் தொலைபேசி எண்ணை சரி  செய்து கொடுத்தால் இன்னும் என்னென்ன செய்வார்களோ என்கிற அச்சம் தான் .

  எதற்கும் ஒரு அவகாசம் வேண்டும் பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள் தனியார் பள்ளி நிர்வாகிகள்.  பள்ளிக்கல்வித்துறை சிந்தித்து செயல்படுமா.,?  சற்று நிதானித்து தான் பார்க்க வேண்டும்...!!