பொன்முடிக்கு சிறை; ராஜகண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை...
அமைச்சர் பொன்முடிக்கு சிறை தண்டனை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த உயர் கல்வித்துறை அமைச்சராக ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், அவரை குற்றவாளி என அறிவித்து 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் ரூ. 50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பின், மேல் முறையீட்டுகாக 30 நாட்களுக்குத் தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் சென்று, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடையைப் பெற, இந்த 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளி என அறிவிக்கப்பட்ட நிலையில் அவரது அமைச்சர் பதவி மற்றும் எம்.எல்.ஏ பதவி பறிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நேற்று முன்தினம் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என்று நீதிமன்றம் அறிவித்த நிலையில், அவரின் காரில் இருந்த தேசியக் கொடி அகற்றப்பட்டது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 8(1)-ன்படி, ஊழல் தடுப்பு போன்ற சட்டங்களின்கீழ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலே சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தகுதி இழப்பு செய்யப்படுவர். அதேபோல ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ், தண்டனை விதிக்கப்படாமல் ஒரு ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டாலும்கூட தகுதி இழப்பு செய்யப்படுவர்.
இதனால் அமைச்சர் பொன்முடி தன்னுடைய பதவியை இழக்கிறார். இதையடுத்து அவர் வகித்து வரும் உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது
வழக்கமாக ஒரு அமைச்சர் தண்டனை பெற்று தகுதி நீக்கம் செய்யப்பட்டாலோ, உடல்நிலை சரியில்லாமல் போனாலோ, அந்தத் துறை புதிதாக ஒருவருக்கு வழங்கப்படும். அல்லது ஏற்கெனவே அமைச்சராக இருக்கும் ஒருவருக்குக் கூடுதலாக அந்த துறையின் பொறுப்பு வழங்கப்படும்.
அந்த வகையில் அமைச்சர் பொன்முடி கவனித்து வந்த உயர் கல்வித்துறை யாரிடம் ஒப்படைக்கப்படும் என்று கேள்வி எழுந்தது. இந்தநிலையில், பிற்படுத்தப்பட்டோர் அமைச்சராக உள்ள ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை இலாக்கா வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக ஒருவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் நிலையில், ஆளுநர் ஒப்புதல் வழங்கிய பிறகு பதவி ஏற்பு விழா நடைபெறும். ஆனால் ஏற்கெனவே இருக்கும் அமைச்சருக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டால், பெரிய நடைமுறைகள் எதுவும் இருக்காது.
முன்னதாக சிறையின் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் பொறுப்புத் துறைகள், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி ஆகியோரிடம் கூடுதலாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.