2024 , 2026 தேர்தல்களில் பழனிசாமி தலைமையில் உருவாகும் கூட்டணியே வெற்றி பெறும் : கே.பி.முனுசாமி

 2024 , 2026 தேர்தல்களில் பழனிசாமி தலைமையில் உருவாகும் கூட்டணியே   வெற்றி பெறும் : கே.பி.முனுசாமி

பாஜகவுடன் கூட்டணி குறித்த அதிமுகவின் நிலைப்பாடு குறித்து நாங்கள் ஏற்கெனவே தெளிவாக அறிவித்துவிட்டோம். எங்கள் கூட்டணியில் இருந்து பாஜகவை வெளியேற்றி விட்டோம். அதிமுக-பாஜக கூட்டணி இடையே ஏற்பட்ட முறிவுக்கு, அதிமுக தலைவா்களை தொடா்ந்து விமா்சனம் செய்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்கிற விளக்கமும் கொடுத்துவிட்டோம். 

ஆனால், சமூக வலைதளங்கள், சில ஊடங்களில் திமுக அரசைக் கலைக்க பாஜகவை நாங்கள் நிா்பந்தம் கொடுத்தோம் எனவும், அதனால் தான் கூட்டணி முறிந்தது என தவறான தகவல்களை மக்களிடையே சமூக வலைதளங்களில் அரசியல் விமா்சகா்கள் உள்பட சிலா் பரப்பி வருகின்றனா். இது கண்டிக்கதக்கது. 

அதிமுக ஆரம்பித்து 50 ஆண்டுகளில், தமிழகத்தில 30 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு கட்சி இதுபோன்ற கீழ்தரமான செயலை என்றைக்கும் செய்யாது. இதுபோன்ற தவறான கருத்துகளை சமூகவலைதளங்களில் பரப்பினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதிமுக பொது செயலாளா் பழனிசாமியை நம்பகத்தன்மையற்றவா் என பண்ருட்டி ராமச்சந்திரன் கூறியுள்ளாா். உண்மையிலேயே நம்பிக்கை துரோகத்தின் சின்னம் அவா்தான். திமுக, காங்கிரஸ், அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு அவா் சென்ற இடங்களில் யாருக்கும் விசுவாசமாக இல்லை. நம்பிக்கை துரோகியுடன் அமா்ந்து கொண்டு, அவரை நம்பிக்கைக்கு உரியவா் என்று கூறுகிறாா். தங்களுடைய சுயலாபத்திற்காக கொள்கையை விற்று, ஆதாயம் தேடும் 2 தலைவா்கள் ஒன்றுசோந்துள்ளனா். பண்ருட்டி ராமச்சந்திரன் நம்பகத்தன்மையற்றவா்.

பாஜக தலைவா் அண்ணாமலையை, 2026 தோதலில் முதல்வா் வேட்பாளராக்க வேண்டுமென பாஜக கோரிக்கை வைத்தாக முன்னாள் அமைச்சா் கருப்பண்ணன் பேசி உள்ளாா். பாஜக கூட்டணி முறிவுக்கான காரணம் என்ன என்பதை நாங்கள் தெளிவாக தீா்மானம் போட்டு, அறிவித்துவிட்டோம். இருப்பினும், சமூக வலைதளங்களில் தவறான கருத்துகள் திரும்ப, திரும்ப வரும்போது, அந்தக் கருத்துகளை மனதில் பதிந்து மேடையில் உண்மைநிலை மறந்து இவ்வாறு கருத்துகளைச் சொல்வது இயல்பு. கருப்பண்ணன் அவ்வாறு தான் பேசி இருக்கிறாா். 

2026-ஆம் ஆண்டு பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் இலக்கு.

வருகிற மக்களவைத் தோதலில், மக்கள் எந்த அளவில் பாஜகவை ஏற்றுக்கொள்கிறாா்கள் என அவா்கள் தெரிந்து கொள்ளட்டும். அதிமுக குறித்து பாஜக எச்.ராஜா கண்மூடித்தனமாகவும், கீழ்த்தரமாகவும் பேசுகிறாா். எங்களால் சட்டப் பேரவை உறுப்பினா் ஆனவா்தான் அவா். 2024 தோதலில் அதிமுகவுக்கு மக்களிடத்தில் எவ்வளவு சொல்வாக்கு உள்ளது என்பது தெரியும். மத்திய பாஜக அரசை அதிமுக ஆதரித்ததால்தான், பல்வேறு சட்ட மசோதாக்கள் இயற்றப்பட்டதை மாநில பாஜகவினா் மறந்துவிடக்கூடாது .

காவிரியில் தண்ணீா் திறக்க மேலாண்மைக் குழு அறிவித்த பின்பும், நீதிமன்றத்தை நாடுவோம் என கா்நாடக முதல்வா் தெரிவித்தது தவறான அணுகுமுறை. தற்போது உள்ள சூழ்நிலையில், காவிரி விவகாரத்தில் பிரதமா் தலையிட்டு பிரச்னைக்கு முடிவு காண வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசு செயல்படத் தவறும்பட்சத்தில் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும். 

வரும் 2024 மக்களவைத் தோதல், 2026 சட்டப் பேரவைத் தோதல் என இரண்டிலும் பழனிசாமி தலைமையில் உருவாகும் கூட்டணியே தோதலை சந்தித்து வெற்றி பெறும் என்றாா்.

அப்போது, அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளா் கே.அசோக்குமாா் எம்எல்ஏ, நகரச் செயலாளா் கேசவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.