ஓசூர் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர சுவாமி மலை கோயில் மாசி மாத திருத்தேரோட்டம்

 ஓசூர் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர சுவாமி மலை கோயில் மாசி மாத திருத்தேரோட்டம்

ஓசூர் ஸ்ரீ சந்திர சூடேஸ்வர சுவாமி மலை கோயில் மாசி மாத திருத்தேரோட்டம். ஆயிரக்கணக்கானோர் தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம்.*

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அமைந்துள்ள பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ மரகதாம்பிகை உடனுறை ஸ்ரீ சந்திர சூடேஸ்வர சுவாமி மலை திருக்கோயில் மாசி மாத திருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருத்தேரின் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

சுமார் 1000 ஆண்டு பழமை வாய்ந்த மலைக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் திருவிழா உற்சவம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான உற்சவமானது கடந்த ஒன்றாம் தேதி புதன்கிழமை வீர சைவ லிங்காயத்து மரபினரால் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருக்கோவிலில் சுவாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றன. 

அப்பொழுது சுவாமி உற்சவமூர்த்தி சிம்ம வாகனம், மயில்வாகனம், நந்தி வாகனம், நாக வாகனம், ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் அமர்ந்து அருள் காட்சி தந்து மலை மீது இருந்து கீழ் இறங்கி வந்து ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரர் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. 

இதைத் தொடர்ந்து நேற்று காலை சிவபெருமான் மற்றும் அம்பாள் உற்சவ மூர்த்திகளுக்கு பல்வேறு திரவியங்களால் ருத்ர அபிஷேகம் நடைபெற்றது. வேத விற்பனர்களின் வேத மந்திரங்கள் முழங்க ருத்ராபிஷேகத்தை தொடர்ந்து பிரம்மஹான சந்தர்ப்பணை நடைபெற்றது. பிறகு சுவாமிக்கு புஷ்ப அலங்காரங்கள் சேவித்து புஷ்ப சாற்றுப்படி உற்சவமும் நடைபெற்றது. 

தொடர்ந்து இரவு ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாண சூடேஸ்வரராக காட்சி தந்த சுவாமிக்கு திருக்கல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் இந்து சைவ சம்பிரதாயப்படி சுவாமிக்கு மாலை மாற்றுதல் உபநயனம் அணிவித்தல் ஆகிய வைபவங்களுடன் திருமாங்கல்யதாரணமும் நடைபெற்று சுவாமி அம்மையப்பனாக திருக்காட்சி தந்து அருள் பாலித்தார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருதேரோட்டம் இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட சுவாமி அம்பாளும் சிவபெருமானும் உற்சவ மூர்த்திகளாக திருத்தேரில் அமர்ந்து சிறப்பு மங்கள ஆரத்தியுடன் தரிசனம் தந்தார். இதனைத் தொடர்ந்து விநாயகப் பெருமான் முருகர் நந்தியம் பெருமாள் தேரில் முன் செல்ல, இவற்றைப் பின் தொடர்ந்து பிரம்மாண்ட திருத்தேரில் சுவாமியின் புறப்பாடும் நடைபெற்றது. 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், கிருஷ்ணகிரி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஏ செல்வகுமார், ஓசூர் எம்எல்ஏ ஒய் பிரகாஷ், ஓசூர் மாநகர மேயர் எஸ் ஏ சத்யா, ஓசூர் சார் ஆட்சியர் திருமதி சரண்யா, ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திருமதி சினேகா, திருத்தேர் கமிட்டி தலைவர் கே ஏ மனோகரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பிரம்மாண்ட திருத்தேரின் படம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். 

அப்போது பக்தர்கள் தேரின் படம் பிடித்து இழுத்து, சம்போ மகாதேவா..... சந்திரசூடேஸ்வரருக்கு அரோகரா.... என்ற பக்தி முழக்கங்கள் விண்ணை பிளக்க திருத்தேர், மலை அடிவாரத்தில் உள்ள தேர் பேட்டையில் 4 மாட வீதிகளிலும் கம்பீரமாக உலா வந்தது. அப்போது வாழைப்பழம் உப்பு மிளகு உள்ளிட்டவற்றை பக்தர்கள் திருத்தேரின் மீது வீசி எறிந்து சமர்ப்பித்து நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டனர். 


திருவிழாவில் ஓசூர் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்களும் அண்டை மாநிலங்களான கர்நாடகா ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த திருவிழாவினை ஒட்டி மாநகர் முழுவதும் 500க்கும் மேற்பட்டபோலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருவிழா நடைபெறுவதால் கண்காணிப்பு கேமரா கொடுக்கப்பட்டு சுமார் 20க்கும் மேற்பட்ட காவல் உதவி மையங்கள் அமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி திருவிழாவில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து வழிபட ஏதுவாக திருக்கோவில் நிர்வாகத்தினர் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் குடிநீர், நீர் மோர், பானகம், பிரசாதங்கள், புளியோதரை, தயிர் சாதம், பொங்கல், சர்க்கரை பொங்கல் அன்னதானங்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

E. V. Palaniyappan